விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு!
சென்னை: அறிவாலயத்தின் உச்சாணிக் கிளையில் இப்போது 'திக் திக்' நிமிடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், உளவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினின் மேஜைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட்டை சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த ரிப்போர்ட்டைப் புரட்டிப் பார்த்த முதல்வரின் முகம் சட்டென மாறியிருக்கிறது. காரணம், திமுக கூட்டணியில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளின் தொகுதிகளில் நிலவரம் எதிர்பார்த்த அளவுக்கு 'பாசிட்டிவ்' ஆக இல்லையாம்!

விஜய் ஃபேக்டர்: அதிர்ச்சியில் அறிவாலயம்
அந்த ரிப்போர்ட்டில் சிவப்பு மையால் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கும் மிக முக்கியமான அம்சம் 'விஜய் ஃபேக்டர்'. தமிழக அரசியல் களத்தில் ஒரு 'எக்ஸ் ஃபேக்டராக' உருவெடுத்திருக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆளுங்கட்சியின் கணக்குகளை அப்படியே தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. பொதுவாகப் புதிய வரவுகள் வாக்குகளைப் பிரித்தால் அது ஆளுங்கட்சிக்கே சாதகமாகும் என்றொரு பிம்பம் உண்டு. ஆனால், இங்கே நிலைமை நேர்மாறாக இருக்கிறது. விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவுக்குப் பாதகமாகவும், எதிர்க்கட்சியினருக்குப் பெரும் பலமாகவும் மாறுவதை உளவுத்துறை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறது.
குறிப்பாக, திமுகவின் தோழமைக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் இருக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள், முதல்முறை வாக்காளர்கள் மற்றும் அரசியலில் எந்தப் பக்கமும் சாயாத நடுநிலை வாக்காளர்கள் என ஒரு பெரும் கூட்டம் விஜய்யின் பக்கம் அணிவகுக்கத் தயாராகி வருவதாக அந்த ரிப்போர்ட் எச்சரிக்கிறது. இது கூட்டணிக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பைகுறைத்து எதிர்க்கட்சிகளுக்கு ஒரு 'ஜாக்பாட்' போல அமைந்துவிடுமாம். இந்தத் தகவலைப் படித்ததும் அதிர்ச்சியில் உறைந்த அறிவாலயத் தலைமை, அடுத்த நொடியே போனை எடுத்து அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்களை வரிசையாகக் கூப்பிட்டு வறுத்தெடுத்திருக்கிறது. "விஜய் பிரிக்கப்போகும் வாக்குகள் நமது கோட்டையை ஓட்டை போட அனுமதிக்கக் கூடாது; கள நிலவரத்தை ஆராய்ந்து தொகுதிகளை இப்போதே இரும்புப்பிடிக்குள் கொண்டு வாருங்கள்!" என அதிரடியான 'டைட்' உத்தரவு பறந்திருக்கிறது.
கூட்டணிக்குள் நடக்கும் 'உள்'குத்து அரசியல்?
இந்த அதிர்ச்சி ஒருபுறமென்றால், அதைவிடப் பெரிய குண்டு ஒன்றும் அமைச்சர்கள் காதில் விழுந்திருக்கிறது. திமுக போட்டியிடும் பல தொகுதிகளில், கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும், விசிகவும் தங்களது வாக்குகளை திமுகவுக்கு முழுமையாக மடைமாற்றம் செய்யப்போவதில்லை என்கிற தகவல் கசிந்துள்ளது. அந்தந்தக் கட்சிகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் ரகசியக் கூட்டங்களை நடத்தி, திமுக வேட்பாளர்களுக்கு எதிராகச் செயல்படவோ அல்லது போதிய ஒத்துழைப்பு வழங்காமல் இருக்கவோ முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.
"எங்களுக்கு ஒதுக்கப்படும் முக்கியத்துவமும், மரியாதையும் குறைந்துவிட்டது" என்கிற ஆதங்கம் அந்தக் கட்சி நிர்வாகிகளிடம் புகைச்சலாக இருந்ததாம். இது அமைச்சர்களுக்குத் தெரியவர, அவர்கள் பதறியடித்துக்கொண்டு முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். விவகாரத்தைக் கேட்ட முதல்வர் தரப்பு, இதிலுள்ள உண்மைத்தன்மை குறித்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.
கரன்சி மழையில் நனையப்போகும் நிர்வாகிகள்!
விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும், நேரத்தை வீணடிக்க விரும்பாத சில சீனியர் அமைச்சர்கள் களத்தில் இறங்கிவிட்டார்கள். காங்கிரஸ் மற்றும் விசிகவின் மாவட்டப் பொறுப்பாளர்களைத் தங்களது பிடிக்குள் கொண்டுவர 'கரன்சி' அஸ்திரத்தைக் கையில் எடுத்துள்ளார்களாம்.
"வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; அதற்குத் தேவையான 'கவனிப்புகளை' நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என டீல் பேசப்பட்டு வருகிறது. பல இடங்களில் கரன்சி கட்டுகள் இப்போதே கட்டவிழ்க்கப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வருகின்றன. இந்த 'பணப் பட்டுவாடா' விவகாரம் தேர்தல் களத்தில் திமுகவுக்குக் கைகொடுக்குமா அல்லது கூட்டணிக்குள் மேலும் விரிசலை ஏற்படுத்துமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி!
மொத்தத்தில், விஜய்யின் வருகையும், கூட்டணிக் கட்சிகளின் ரகசிய முடிவுகளும் திமுக கோட்டையைச் சற்று ஆட்டம் காண வைத்திருப்பது நிஜம் என்கிறார்கள் விவரம் அறிந்த உடன்பிறப்புகள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications