10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி
சென்னை: திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை நாளையுடன் முடிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 10க்கும் அதிகமான சீட்டுகளை கோர உள்ளதாக கூறப்படும் நிலையில் திமுகவோ இன்னொரு பிளானை கையில் வைத்துள்ளது. இதனால் திமுக போடும் கணக்கிற்கு திருமாவளவன் ஒப்புக்கொள்வாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளதோடு, உண்மையில் விசிகவை கட்டுப்படுத்துவது திமுகவுக்கு பெரும் தலைவலியாக இருக்கலாம் என்ற பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஒரே கட்டமாக 234 சட்டசபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4 ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் தான் திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. தொடக்கத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
காங்கிரஸ் - கம்யூனிஸ்ட்டுகள் பிரச்சனை
காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறியதோடு 41 தொகுதிகள் வரை கோரியது. அதன்பிறகு கடும் இழுபறிக்கு பிறகு கடந்த முறையை விட 3 இடங்களை கூடுதலாக ஒதுக்கி 28 சட்டசபை தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதிய திமுக, காங்கிரஸ் கட்சிக்கு வழங்கியது.
அதேபோல் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கடந்த முறை தலா 6 சட்டசபை தொகுதிகள் வழங்கின. இதில் தலா 2 தொகுதிகளில் மட்டுமே அந்த கட்சிகள் வென்றன. இதனால் தலா 5 தொகுதிகள் மட்டுமே வழங்கப்படும் என்று 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் திமுக கூறியது. நீண்ட இழுபறிக்கு பிறகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 தொகுதிக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முரண்டு பிடித்து வருகிறது. கடந்த முறையை விட கூடுதல் சீட் கட்டாயம் வேண்டும் என்று உறுதியாக உள்ளது. அதேவேளையில் திமுகவோ, 5 தொகுதி மட்டும் தான் என்று கறாராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தெரிவித்துவிட்டது. இதனால் இழுபறி நீடித்து வருகிறது.
விசிக உடன் திமுக பேச்சுவார்த்தை
இதற்கிடையே தான் திமுக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருக்கும் திருமாவளவனின் விசிக உடன் இன்று அல்லது நாளையுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை மட்டும் தான் நடந்து முடிந்தது. காங்கிரஸ் பிரச்சனை, கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறி உள்ளிட்டவற்றால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. இந்நிலையில் தான் விசிகவுடன் 2வது கட்ட பேச்சுவார்த்தை இன்று அல்லது நாளை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.
விசிக எத்தனை தொகுதிகள் கேட்கும்?
இதில் விசிக 10க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இரட்டை இலக்கத்தில் கட்டாயம் தொகுதிகள் வேண்டும். 10 தொகுதிகளுக்கு குறைக்க கூடாது என்று விசிக சார்பில் திமுகவிடம் டிமாண்ட் வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எதற்காக விசிகவுக்கு 10 தொகுதிகள் வழங்க வேண்டும் என்பது பற்றி விசிக எடுத்து கூற உள்ளது.
முதல் காரணம்
அதில் முதல் விஷயம் என்னவென்றால் தற்போது விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் விசிக பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்தது. இதனால் தங்களுக்கு உரிய மரியாதையை தர வேண்டும் என விசிக நினைக்கிறது.
2வது காரணம்
2வது காரணம் என்னவென்றால் வடமாவட்டங்களில் விசிகவுக்கு செல்வாக்கு உள்ளது. ஆதிதிராவிடர் ஓட்டுகளை திமுக கூட்டணிக்கு கொண்டு வருவதில் விசிக பெரும் பங்கு வகிக்கிறது. அதோடு கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் 4 இடங்களில் விசிக வென்றுள்ளது. இதனால் 2 கம்யூனிஸ்ட், மதிமுகவை ஒப்பிடும்போது வெற்றி சதவீதம் அதிகமாக உள்ளது என விசிக தெரிவிக்க உள்ளது.
3வது காரணம்
3வது காரணம் என்னவென்றால் திமுக கூட்டணியில் நம்பிக்கையான அதேவேளையில் நீண்டகால தோழமை கட்சியாக விசிக உள்ளது. ஆனால் இப்போது கூட்டணிக்கு வந்த தேமுதிகவிற்கு 6 முதல் 8 தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ராஜ்யசபா சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு 10 சட்டசபை தொகுதிகளுக்கு குறையாமல் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று விசிக தரப்பில் முறையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுகவின் முடிவு என்ன?
ஆனால் திமுக தரப்போ, விசிகவின் கோரிக்கையை ஏற்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த முறையை போல் 6 தொகுதி மட்டும் தான் விசிகவிற்கு வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதுபற்றி திமுகவை சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர், ''கூட்டணியில் புதிதாக தேமுதிக, மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ உள்ளிட்டவை வந்துள்ளன. இதனால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் தலா ஒன்று குறைக்க கூறப்பட்டுள்ளது.
மதிமுக 2 தொகுதிகளை விட்டு கொடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML), கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி , மனிதநேய மக்கள் கட்சி தலா ஒரு தொகுதியைக் கைவிடவும் ஒப்புக்கொண்டன. விசிகவை எடுத்து கொண்டால் தற்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியுள்ளது. இதனால் வரும் தேர்தலில் கடந்த முறையை போல் 6 சட்டசபை தொகுதிகள் வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
திருமாவளவன் ஒப்புக்கொள்வாரா?
இதன்மூலம் விசிகவிற்கு 6 சட்டசபை தொகுதிகள் தான் வழங்க திமுக முடிவெடுத்துள்ளதை இது காட்டுகிறது. ஆனால் இதற்கு திருமாவளவன் ஒப்புக்கொள்வாரா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதேவேளையில்முடிந்தவரை விசிகவிற்கு 6 தொகுதிகளை மட்டுமே திமுக வழங்கும். ஒருவேளை முரண்டு பிடித்தால் கூடுதலாக ஒரு சீட் கூடுதலாக வழங்கி 7 ல் டீலை திமுக முடிக்கலாம். மாறாக விசிகவிற்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட சீட்டுகள் வழங்க வாய்ப்பில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விசிக - திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு என்னவாக போகிறது? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications