40-ம் திமுக கூட்டணிக்கே.. தொகுதி பங்கீடு முடிந்ததும் அடித்து சொன்ன காங்கிரஸ் செல்வப்பெருந்தகை
சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்பட 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சியே வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. லோக்சபா தேர்தலையொட்டி, மத்தியில் பாஜக, இந்தியா கூட்டணி இடையே தான் நேரடி போட்டி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என 3 கட்சிகளும் தங்கள் தலைமையில் தனித்தனி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

இதில், திமுக கடந்த முறை கூட்டணி அமைத்து போட்டியிட்ட கட்சிகளுடன் சேர்ந்தே இந்த முறையும் தேர்தலை சந்திக்கிறது. அதன்படி தொகுதி பங்கீட்டில் திமுக வேகம் காட்டியது. தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய 2 தொகுதியை ஒதுக்கியது.
10 தொகுதிகள் ஒதுக்கீடு: அதற்கு அடுத்ததாக, சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் க்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேகவிற்கு நாமக்கல் தொகுதி என தொகுதி பங்கீட்டில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியிருந்தது. இன்று மக்கள் நீதி மய்யத்திற்கு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யாத திமுக, ராஜ்யசபா தொகுதி ஒன்றை மட்டும் ஒதுக்கியது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தான் இன்னும் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடும் உறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது. அதன்படி, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒன்று என காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செல்வப்பெருந்தகை பேட்டி: இதற்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சியே வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- திமுகவிற்கு காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. புதுவை உள்பட 10 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
கேசி வேணுகோபால், முகுல் வாஸ்னிக், தமிழக பொறுப்பாளர் அஜய்குமார் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். தோழமை கட்சிகள் வெற்றி பெற காங்கிரஸ் கட்சிக்கு பணியாற்றுவது போல தொண்டர்கள் பணியாற்றுவார்கள்" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications