எடப்பாடி பழனிசாமி போடும் கணக்கு.. சட்டசபையில் தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை.. எஸ்பி வேலுமணி பதிலடி!
சென்னை: டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடந்துள்ளது. அதில், கணக்கு கேட்டதால் தொடங்கப்பட்ட அதிமுக, தற்போது தப்புக் கணக்கு போடுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதற்கு, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு கூட்டி கழித்து பார்த்தால் சரியாகத்தான் இருக்கும் என்று அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. நேற்றிரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் 45 நிமிடங்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக்கு பின் அமித் ஷா, 2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும் என்று பதிவிட்டார்.

இதன் மூலமாக அதிமுக - பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி என்று சொல்லப்பட்டது. இருந்தாலும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், கூட்டணி தொடர்பாக பேசவே இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது. அதனால் தேர்தலுக்கு முன்பாகவே கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்தார். ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாடு தொடர்பான கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்தார்.
இந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக மறைமுக விவாதம் சட்டப்பேரவையில் அரங்கேறியுள்ளது. அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால்தான் தொடங்கப்பட்டது. 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து எங்கள் கணக்கை தொடங்குவோம் என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, கணக்கு கேட்டு ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, இப்போது தப்புக் கணக்கு போடுகிறது என்று பதில் அளித்தார். அப்போது அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும் என்று கூற, பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி எழுந்து, அண்ணாவையும், உங்கள் அம்மாவையும் மறந்துவிட்டீர்கள் என்று பதிலடி கொடுத்தார்.
நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்தும், அமித் ஷா உடனான சந்திப்பு குறித்தும் பேசி இருந்தார். தற்போது சட்டப்பேரவையில் அமித் ஷா - எடப்பாடி பழனிசாமியின் சந்திப்பு தொடர்பாக இரு கட்சியினரும் பேசி இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications