ஈரோடு கிழக்கு தேர்தல்: கட்சிகள் புறக்கணிப்பு! திமுக vs நாதக! அதிமுக வாக்குகள் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் இது திமுகவுடன் மோதும் நாம் தமிழர் கட்சிக்கு பலன் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 3வது முறையாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். ஆனால் அவர் மாரடைப்பால் இறந்ததால் அந்த தொகுதிக்கு கடந்த 2023 ம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் களம் கண்டார். அவர் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த நிலையில் அவரும் கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி உடல்நிலை பாதிப்பால் இறந்துவிட்டார். இதனால் தற்போது மீண்டும் ஒரு முறை பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பொங்கல் பண்டிகை அன்று அறிவிக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.
அதிமுக, தேமுதிக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. பாஜகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தோ யாராவது போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாஜகவும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக சொல்லிவிட்டது.
இதனால் தற்போது களத்தில் திமுகவும் நாம் தமிழர் கட்சியும் நேரடியாக போட்டியிடுகின்றன. பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியே வெல்லும் என்பது எழுதப்படாத ஒரு விதி. அப்படியிருக்கும் போது ஈரோடு கிழக்கு தொகுதி என்பது திமுகவுக்குத்தான் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக களத்தில் இல்லை. 4 சட்டசபை உறுப்பினர்களை வைத்துக் கொண்டு நாங்கள்தான் எதிர்க்கட்சி என மார்தட்டிக் கொண்ட பாஜகவும் களத்தில் இல்லை. அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் போட்டியிட மறுத்துவிட்டது. இது நாம் தமிழர் கட்சிக்கு சாதகமாதக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா நவநீதன் என்பவர் 10,827 வாக்குகளை பெற்றிருந்தார். அவர் பெற்ற வாக்கு சதவீதம் 6.35 ஆகும். இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைக்குமா என்பதை பார்க்கலாம்.
இதுகுறித்து ஒரு ஊடகத்திற்கு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் கூறியிருப்பதாவது: மாநில கட்சியாக நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளதால் இந்த தேர்தலில் இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகளை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. டெபாசிட் கிடைப்பதற்கு ஒரு கட்சியானது 16.4 சதவீத வாக்குகளை பெற வேண்டும். அது போல் இரண்டாம் இடம் கிடைக்க வேண்டும் என்றால் அந்த கட்சியானது 20 சதவீதம் வாக்குகளை பெற்றிருக்க வேண்டும். எனவே திமுக வென்றுவிட்டால் சீமான் கட்சி இரண்டாவது இடம் என சொல்லமுடியாது. 4 அல்லது 5 ஆவது இடம் என சொல்லிக் கொள்ளலாம்.
சீமானை பொருத்தமட்டில் பெரியாரை அவமரியாதையாக பேசிவிட்டு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வசிக்கும் தொகுதிக்கே போய் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்றால் எப்படி போடுவார்கள். அதிமுக, பாஜக, தேமுதிக போட்டியிடாதது சீமானுக்கு சாதகம் என்ற போதிலும் இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகள் கிடைக்காது. வேண்டுமானால் ஆளும் கட்சியை எதிர்த்து போட்டியிடும் தைரியமான கட்சி என சீமான் சொல்லிக் கொள்ள இது வாய்ப்பாகிவிட்டது.
இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது சீமானுக்கும் தெரியும். ஆனாலும் அவர் வெற்றி தோல்வி குறித்து எந்த கவலையும் படாமல் களத்தில் இறங்குகிறார். அதிலும் பெரியாரின் உறவினர்கள், குடும்பத்தினர் வசிக்கும் தொகுதியிலேயே சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது பாராட்ட வேண்டியதுதான் என தராசு ஷியாம் தெரிவித்தார். எனவே நாம் தமிழர் கட்சி இந்த தேர்தலில் ஆதரவு எப்படி இருக்கிறது என்பது பிப்ரவரி 8-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது தெரியவரும். மேலும் கடந்த தேர்தலில் அதிமுக பெற்ற 44 ஆயிரம் வாக்குகள் திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் கிடைக்குமா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications