'இப்போ விட்டா இனி எதிர்காலமே இல்ல'... ஒரத்தநாட்டில் 'ஒர்த்' மோதல்.. சம்பவம் இருக்கு!
சென்னை: திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்ட நிலையில், டெல்டா பெல்ட்டின் கட்சி அலுவலகங்கள் 'தீப்பொறி திருமுகம்' மோடுக்கு மாறியுள்ளன. குறிப்பாக, ஒரத்தநாடு தொகுதியில்.
முக்குலத்தோர் குவிந்து காணப்படும் தொகுதி ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி. தஞ்சை, பட்டுக்கோட்டை நகரங்கள் இடையேயான 40 கி.மீ தொலைவின் மையமாக விளங்கி வரும் தொகுதி இந்த ஒரத்தநாடு.
இங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில், திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரனுக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டிருப்பதன் மூலம், சபாஷ்! சரியான போட்டி என்ற தகதக நிலவரத்தை உருவாக்கிவிட்டது திமுக.

ஷாக் தோல்வி
2001, 2006, 2011 என்று தேர்தல்களில் ஹாட்ரிக் அடித்தவர் வைத்திலிங்கம். தனக்கென்று தனி செல்வாக்கை ஒரத்தநாட்டில் உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், 2016ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் திமுகவின் ராமச்சந்திரனிடம் வெறும் 3642 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதில், அவரைவிட பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தான்.

சொந்த கட்சியினரே...
ராமச்சந்திரனை பொறுத்தவரை மிக எளிமையான நபர் என்று ஒரத்தநாடு சுற்று வட்டார கிராமங்களில் பெயர் பெற்றவர். சுக, துக்க நிகழ்வுகளுக்கு கூட சாதாரணமாக தனது பைக்கிலேயே சென்று வருவது இவரது வாடிக்கை. பெரிதாக ஆர்ப்பாட்டம் இல்லாத மனிதர். ஆனால், 2016 தேர்தலின் போது, பொதுக் கூட்டத்தில் வைத்திலிங்கம் மீது செருப்பு வீசப்பட்டதும், சொந்த கட்சியினரே வைத்திலிங்கத்தின் தோல்விக்காக உழைத்தது என்று இவரது தோல்விக்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டன.

போயஸ் கார்டன்
குறிப்பாக, ஒரத்தநாட்டில் உள்ள பின்னையூரைச் சேர்ந்த தங்கமுத்து ஆதரவாளர்கள் தான் வைத்திலிங்கத்தை தோற்கடிக்க முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சசிகலாவுக்கு முன்பு, தஞ்சை பகுதியில், ஜெயலலிதாவின் வலது கரமாக இருந்தவர் தங்கமுத்து. இவரிடம் இருந்தவர் தான் வைத்திலிங்கம். ஆனால், சசிகலா என்ட்ரி கொடுத்த பிறகு, தங்கமுத்து ஓரம்கட்டப்பட்டார். வைத்திலிங்கத்துக்கு போயஸ் கார்டனில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அதன்பிறகு, வைத்திலிங்கம் தொடர்ந்து வெற்றிப் பெற்றாலும், 2016 தேர்தலில் அவர்கள் ரிவென்ஜ் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

தொடங்கிய சரிவு
அதுமட்டுமின்றி, தஞ்சை தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் நீலமேகமும், அதிமுக சார்பில் காந்தியும் போட்டியிட்டனர். இதில் காந்தி தோல்வி அடைந்தார். மேலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடைய இணக்கமாக இல்லாமலும், எம்பி வைத்திலிங்கத்திடம், யாரையும் நெருங்க விடாமல் காந்தி பார்த்து கொண்டதாக முணுமுணுக்கப்பட்டது. இதனால், கடும் விரக்தியில் இருந்த சொந்த கட்சியினரே ஒரத்தநாட்டில் கடந்த முறை வைத்திலிங்கத்தை தோற்கடிக்க வேலை பார்த்தார்கள் என்றும் கூறப்பட்டது.

ஜெயித்தால் தான் எதிர்காலம்
இந்த நிலையில் தான் மீண்டும் ஒரத்தநாட்டில் வைத்திலிங்கம் களம் காண்கிறார். திமுகவும், ராமச்சந்திரன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் சீட் கொடுத்திருக்கிறது. இருவருக்குமே ஃபேஸ் வேல்யூ அதிகம் இருப்பதால், 'ஜெயித்தால் என்ன செய்வேன்?' என்று அளிக்கும் வாக்குறுதிகளை பொறுத்தே இருவரின் வெற்றி வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனலாம். குறிப்பாக, ஜெயலலிதா மறைந்த பிறகு, அதிமுக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், 'இதில் ஜெயித்தால் தான் எதிர்காலம்' என்பதை வைத்திலிங்கம் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால், இங்கு போட்டி மிக ஆக்ரோஷமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அதுமட்டுமின்றி, சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், அவர் நினைத்தால் ஒரத்தநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதால், டூ ஆர் டை நிலையில் உள்ளார் வைத்திலிங்கம்.












Click it and Unblock the Notifications