ஐடி ரெய்டு நடக்கும் இடங்களில் திரண்ட திமுகவினர்.. திடீர் பரபரப்பு.. குவிக்கப்படும் போலீசார்!
சென்னை : மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில், ஐ.டி ரெய்டு நடக்கும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை, கரூர், கோவை என அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும், அவருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் முறை நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் உறவினர்கள் என தமிழ்நாடு முழுவதும் வருமான வரித்துறை இன்று காலை 7 மணி முதல் பரபர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக், மின்சாரத்துறை தொடர்புடைய அரசு ஒப்பந்தாரர்களின் இல்லங்கள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் முக்கிய அமைச்சரான செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெறும் சோதனை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திடீர் சோதனையால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில் வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது தி.மு.கவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபமாக அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் வந்தன. டாஸ்மாக்கில் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், பார் டெண்டர் ஒதுக்கீடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் தொடர்ந்து புகார்கள் வந்தது.
மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.டி ரெய்டு நடக்கும் இடங்களில் திமுகவினர் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கோவை, கரூர் உட்பட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ஐடி ரெய்டு நடப்பதையொட்டி, அங்கெல்லாம் திமுகவினர் குவிந்து வருவதால், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
