விஜய்க்கு இனி முக்கியத்துவம் தர வேண்டாம்.. 2 நாள் ஆச்சு.. கண்டுக்க கூட இல்லையே.. திமுக அடித்த அடி!
சென்னை: நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதிலளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிமேல்.. விஜய் அவர்களின் கருத்துகளுக்குப் பதிலளிப்பது அவருக்கு தேவையற்ற அரசியல் முக்கியத்துவத்தையும் வெளிச்சத்தையும் அளிக்கும் என்று திமுக தலைமை நம்புவதாக அக்கட்சியின் மூத்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரூர் விவகாரம் குறித்து குறித்து விஜய் தெரிவித்த கருத்துக்களுக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவோ அல்லது எதிர்வினையாற்றவோ வேண்டாம் என திமுக உறுதியான முடிவு எடுத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜய் பேசியது என்ன?
தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், எங்களை அரசியல் செய்ய வேண்டாம், அரசியல் பேச வேண்டாம் என்று கூறிவிட்டு.. முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் நமக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் எங்களை விமர்சனம் செய்யும் விதமாக மோசமாக, அரசியல் செய்யும் விதமாக பேசி உள்ளார்.
நமது குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனைகளிலும், வலியிலும் இவ்வளவு நாட்கள் இருந்தோம். நாம் அமைதி காத்த நேரத்தில் நம்மை பற்றி அர்த்தமற்ற அவதூறுகள் பரப்பப்பட்டன. ஆனால் அதே தமிழக அரசை உச்ச நீதிமன்றம் நறுக்கு நறுக்கு என்று குட்டி உள்ளார்கள். உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பாக வாதம் செய்த அறிவார்த்த வழக்கறிஞர்கள் கூனிக்குறுகி நின்றார்கள். இதை நாடே பார்த்தது.
அவசரமாக தனி நபர் ஆணையம் அமைத்தது ஏன் என்று குட்டு வைத்து.. அதை கலைத்து உள்ளனர். மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு எதுவும் இல்லாமல்.. அரசியல் ஆட்டம் ஆடி வருகிறார். அதிகார மமதையில் ஆடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவில்.. உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை ஸ்டாலின் எங்களுக்கு விதித்தார்.
மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டது. ஸ்டாலின் சட்டசபையில் சொன்னது எல்லாம் வடிகட்டிய பொய் என்பது தெரிந்துவிட்டது. முதல்வர் சொன்னது எதிலும் உண்மை இல்லை. இது எல்லாம் நடந்தது.. எதற்காக நடந்தது.. என்பதை மக்கள் மறக்கவில்லை.. ஸ்டாலின்தான் மறந்துவிட்டார். இந்த திமுக ஆட்சியை இழக்கும். இந்த திமுக மீண்டும் அறிவாலயத்தில் ஒளிந்துகொள்ளும் நிலை ஏற்படும், என்று விஜய் பேசி உள்ளார்.
திமுக கண்டுகொள்ளவில்லை
இப்படிப்பட்ட நிலையில்தான், நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக பதிலளிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய நிலையில் அவரை அரசியல் ரீதியாகப் பொருட்படுத்தவில்லை. அவரது அறிக்கைகள் கவனத்தை ஈர்ப்பதற்காகவே உள்ளது. அதனால் அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு திமுக நிர்வாகி கூறினார்.
விஜய்யின் அரசியல் செல்வாக்கு இன்னும் குறைவாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் அவரது வாக்கு சதவீதம் 15 சதவீதத்திற்கும் குறைவாகவே இருப்பதாகவும் கட்சி நம்புகிறது. திமுக அரசு ஆட்சி மற்றும் மக்களின் நலனில் கவனம் செலுத்துகிறது. விளம்பரத்திற்காக வெளியிடப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் நாங்கள் பதிலளித்து நேரத்தை வீணடிக்க முடியாது என்று மற்றொரு திமுக தலைவர் நம்மிடம் தெரிவித்தார்.
விஜய் தனது கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில், திமுக அரசை பல விஷயங்களில் கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு இணையத்திலும் இளைஞர்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றது. இருப்பினும், ஆளும் கட்சி அவரது கருத்துக்களை அங்கீகரித்து அவரை ஒரு அரசியல் போட்டியாளராக முன்னிலைப்படுத்த விரும்பவில்லை.
கரூர் சம்பவம் தொடர்பாக நடந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசு மீது நடிகர் விஜய் இப்படி விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான எதிர்வினையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சின்ன அறிக்கை கூட வரவில்லை. செய்தி தொடர்பாளர்கள் கூட விஜயை விமர்சனம் செய்யவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications