6 இல்லங்க 15.. மினி சட்டசபைக்கு தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்? பரிட்சைக்கு ரெடியான விஜய்! வெல்வாரா?
சென்னை: தமிழக அரசியலில் இடைத்தேர்தல் குறித்த பேச்சு மீண்டும் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாகியுள்ள நிலையில், மேலும் 9 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், தமிழகம் 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் மூலம் ஒரு மினி சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகலாம் என கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பங்கள் மற்றும் சில எம்எல்ஏக்களின் அதிருப்தி காரணமாக தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் விராலிமலை தொகுதி எம்எல்ஏவுமான சி.விஜயபாஸ்கர் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தது அதிமுகவிலும் தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி விஜயபாஸ்கர்
முன்னதாக, சி விஜயபாஸ்கர் தனது ராஜினாமா கடிதத்தை நேரடியாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரிடம் வழங்கியதைத் தொடர்ந்து, விராலிமலை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பாகவே அதிமுகவைச் சேர்ந்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல் மற்றும் ஜெயக்குமார் ஆகிய நான்கு எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
இடைத்தேர்தல்
அதேபோல் வேறு சில காரணங்களால் காலியான தொகுதிகளையும் சேர்த்து தமிழகத்தில் தற்போது 6 தொகுதிகள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசியல் வட்டாரங்களில் புதிய தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, அதிமுகவைச் சேர்ந்த மேலும் 7 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும், அவர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது.
அதிமுகவில் அதிருப்தி
தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அதிருப்தி மற்றும் எதிர்காலம் குறித்து நிலவும் குழப்பம் காரணமாக சிலர் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தவெக ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் அந்தக் கட்சியை நோக்கி செல்வது அரசியல் வட்டாரங்களை கவனிக்க வைத்துள்ளது.
மதிமுக
இதற்கிடையே, திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிலும் அதிருப்தி குரல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தற்போது அந்த அதிருப்தியின் வெளிப்பாடாக மதிமுகவைச் சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
15 தொகுதிகள் காலி
அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த பிறகு, மதிமுக சின்னத்திலேயே மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கத் தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஒருவேளை இந்த 9 பேரும் ராஜினாமா செய்தால், தற்போது காலியாக உள்ள 6 தொகுதிகளுடன் சேர்த்து மொத்தம் 15 தொகுதிகள் காலியாகும். இதனால் தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் பரபரப்பில் மூழ்கும் சூழல் உருவாகலாம்.
மினி சட்டப்பேரவைத் தேர்தல்
"15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்பது சாதாரண விஷயம் அல்ல. இது ஒரு மினி சட்டப்பேரவைத் தேர்தலாகவே பார்க்கப்படும். ஆளும் கட்சியின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் வலிமை, கூட்டணிகளின் நிலை மற்றும் மக்கள் மனநிலை ஆகியவற்றை அளவிடும் அரசியல் சோதனையாக அது மாறும்" என தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
தவெக அரசு
குறிப்பாக தவெக அரசு பொறுப்பேற்று குறுகிய காலமே ஆகியுள்ள நிலையில் நடைபெறக்கூடிய எந்த இடைத்தேர்தலும் அரசியல் ரீதியாக மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆளும் கட்சிக்கு மக்கள் ஆதரவு தொடர்கிறதா அல்லது எதிர்க்கட்சிகள் மீண்டும் எழுச்சி பெறுகிறதா என்பதை நிரூபிக்கும் களமாகவும் அது அமையும் என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications