விஜய்யின் ஆட்சியை கவிழ்க்க ஈசிஆர் நட்சத்திர ஓட்டலில் சதி.. 35 கோடியுடன் கரூரைச் சேர்ந்த 2 பேர்?
சென்னை: தவெக ஆட்சியை கவிழ்க்க சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் சதி ஆலோசனை நடைபெற்றதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஐபிடிஎஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் திருநாவுக்கரசு தவெக எம்எல்ஏவை நேரடியாக தொடர்பு கொண்டு பேரம் பேசினார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ஐடிபிஎஸ் திருநாவுக்கரசு கொடுத்த தகவலின் பேரில் திருச்சி நரேஷ், சென்னை தியாகராஜன் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட பதிவில், "தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது வாக்கு பெறுவதற்காக, தவெக (TVK) எம்.எல்.ஏ ஒருவருக்கு ₹35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக மூவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் ஐந்து பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி விரிவாக பார்ப்போம்.

தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சியை கவிழ்க்க சென்னை கிழக்கு கடற்கரையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திமுக அதிமுக பிரமுகர்கள் இணைந்து கூட்டு சதி நடத்தி, ஆலோசனையில் ஈடுபட்டதாகவும், அதன்பின்னர் பேரம் பேசியிருப்பதாகவும் விசாரணை நடத்திய போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதுவரை இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும் சிலரிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் ஊத்தங்கரை எம்எல்ஏவான இளையராஜாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட திருநாவுக்கரசு என்ற யூடியூபர், தான் ஒரு கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், முக்கிய கட்சி சார்ந்த சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில், தொடர்பு கொண்டு பேசுவதாக கூறிவிட்டு, சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும், ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும், அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பின் போது, நாங்கள் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும், அப்படி நடந்து கொண்டால் சன்மானமாக 35 கோடி ரூபாய் உங்களுக்கு தருவதாக ஆசை வார்த்தை கூறினாராம்.
நீங்கள் கஷ்டத்தில் இருக்குறீங்க. உங்கள் கஷ்டம் எல்லாம் எனக்கு தெரியும்.. நாங்கள் தரும் 35 கோடி உங்களுக்கு பெருமளவு உதவியாக இருக்கும் என்றெல்லாம் யூடியூபர் திருநாவுக்கரசு ஆசைவார்த்தை கூறினாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த இளையராஜா,தனக்கு விருப்பம் இல்லை என்று கூறிய போதும், விடாமல் தொடர்ச்சியாக வாட்ஸ் அப் கால் மூலமாக பேசியதுடன், இதனை வெளியில் கூறினால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று எல்லாம் மிரட்டினார்களாம்..
இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜா அளித்தார். அந்த புகாரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தன்னிடம், மக்கள் பணிகள் செய்யக்கூடாது என்றும், தன் பேச்சுக்கு உடன்பட்டால் லஞ்சம் தருவதாகவும், நடக்காவிட்டால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்ததாக திருநாவுக்கரசு மீது குற்றம்சாட்டியிருந்தார்.
அதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருநாவுக்கரசு, மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சீனிவாசன், குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ், கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணையில் திமுக பிரமுகர்களான கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரும் இருக்கிறார்கள்.
இவர்கள் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் எதிராக நடந்து கொள்ளும் தவெக எம்எல்ஏக்களுக்கு நரேஷ் என்பவரிடம் பேசி 35 கோடி வாங்கி தருவதாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம்.. அதன்பிறகு தான் நரேஷின் நண்பராக இருக்கக்கூடிய தியாகராஜன் என்பவர் மூலம் அதிமுக பிரமுகரான சீனிவாசன், செல்வன், போலி பத்திரிக்கையாளர் ராஜேஷை அழைத்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சதி திட்டத்தையும் நடத்தினார்களாம். அதன்பிறகு தான் இளையராஜாவை தொடர்பு கொண்டார்களாம். முதலில் போலி பத்திரிக்கையாளர் ராஜேஷ் இரண்டு முறை தொடர்பு கொண்டு பேசியதும், அவருக்கு செவிசாய்க்காதததால், திருநாவுக்கரசே நேரடியாக பேசி இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என்று விசாரணை நடத்திய போலீசாரின் வட்டாரங்கள் கூறுகின்றன. மொத்தம் ரூ. 180 கோடியில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக விசாரணை தகவல்கள் வெளியாகி உள்ளன.














Click it and Unblock the Notifications