மார்ச் 8.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்.. கூட்டணி கட்சிகளுடன் அத்தனையும் பேசி முடிக்கும் திமுக!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் மார்ச் 8ஆம் தேதிக்குள் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீட்டை முடிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில், கூட்டணி கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை பிப்ரவரி 22ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அழுத்தம் காரணமாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், பிப்ரவரி 20ஆம் தேதியையொட்டி பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் சிறியக் கட்சிகள் தொடங்கி, அடுத்த ஒரு வாரத்தில் அத்தனை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தையை முடிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது. திமுக தரப்பில் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு, மகளிரணி மாநாடு, பூத் கமிட்டி மாநாடு ஆகியவற்றை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் திருப்பத்தூரில் இன்று வடக்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடக்கவுள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பங்கேற்பதால், அக்கட்சியினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்பின் பிப்ரவரி 22ஆம் தேதி கோவையில் இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடக்கவுள்ளது. இது உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்பின் பிப்ரவரி 22 முதல் மார்ச் முதல் வாரம் வரை முதல்வர் ஸ்டாலின் வெளி மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள எந்த தேதியையும் யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதற்கு கூட்டணி கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து, தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடம் பணிகளில் ஈடுபட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இதன்பின் நேரடியாக மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் நடக்கவுள்ள திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இந்த மாநாட்டில் திமுக தலைவர்கள் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சியினரையும் பங்கேற்க வைக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. திமுகவின் முதல் தேர்தல் பிரச்சார கூட்டமாகவும் இதனை மாற்ற பணிகள் நடந்து வருகிறது.
இந்த மாநாட்டில் திமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். அந்த நேரத்தில் கூட்டணிக்குள் எந்த சிக்கலும் இல்லை, கூட்டணி தொகுதி பங்கீடு அனைவருக்கும் நிறைவாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் அனைவரும் இணைந்து இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதற்கான பணிகளை திமுக மேற்கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications