டோனை மாற்றிய பிரவீன் சக்ரவர்த்தி.. ரிஸ்க் எடுக்க விரும்பாத காங்கிரஸ் தலைமை.. பின்னணியில் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் டெல்லி காங்கிரஸ் தலைமை எந்த ரிஸ்கையும் எடுக்க விரும்பவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். தமிழ்நாடு அரசின் கடனை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்ட பிரவீன் சக்ரவர்த்தி, தற்போது திடீரென யூடர்ன் போட்டிருப்பதால், திமுக காங்கிரஸ் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் ராகுல் காந்தியின் வலதுகரமக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தி சென்னை வந்து தவெக தலைவர் விஜய்யுடன் ஆலோசனை நடத்திவிட்டு சென்றிருக்கிறார். கரூர் விவகாரத்தின் போது நேரடியாக ராகுல் காந்தி விஜய்யை அழைத்து செல்ஃபோனில் பேசினார்.

அதேபோல் திரை மறைவிலும் காங்கிரஸ் கட்சி தரப்பில் விஜய்க்கு ஆதரவு அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்பட்டது. அதேபோல் விஜய்யுடன் சந்திப்பு நடத்திய பின் பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக அரசின் கடன் சுமையை உத்தரப் பிரதேச கடனுடன் ஒப்பிட்டு விமர்சித்தார்.
இது எதிர்க்கட்சிகளுக்கும் தீனியாக அமைந்தது. அதேபோல் பிரவீன் சக்ரவர்த்தியை தொடர்ந்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக கொந்தளித்தார். கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் வெல்ல முடியாது என்று மாணிக்கம் தாகூர் பேசியது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதற்கேற்ப கிரிஷ் சோடங்கரும் ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று எந்த அரசியல் கட்சியாவது சொல்லுமா? என்று பேசினார்.
ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மட்டுமே திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்று தொடர்ந்து கூறி வந்தார். அதேபோல் டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக பேசி வருவதாகவும் தெரிவித்தார். இதன் மூலமாக திமுக நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசி வருவது உறுதியாகியது.
இந்த நிலையில் சென்னை வந்த பிரவீன் சக்ரவர்த்தி, விஜய்யுடன் சந்திப்பு நடத்தியது உண்மை தான். ஆனால் காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து தலைமையே முடியும் செய்யும். தமிழ்நாட்டின் கடன் சூழ்நிலை பற்றி ஆர்பிஐ என்ன சொல்லி இருக்கிறது என்பது குறித்துதான் நான் சொன்னேன். உத்தரப் பிரதேச நிதிநிலையோடு நான் ஒப்பிட்டு பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக பிரவீன் சக்ரவர்த்தியை அடக்கி வாசிக்க காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் திமுக வலிமையாக இருப்பதோடு, பாஜக எதிர்ப்பில் காங்கிரஸ் கட்சிக்கு உறுதுணையாக இருந்து வருவதே காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் விரைவில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications