29 + 2 ராஜ்யசபா சீட் கேட்கும் காங்கிரஸ்.. இழுத்துப் பிடிக்கும் திமுக! தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்?
சென்னை: திமுக குழுவினர் உடனான அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சி 29 சட்டசபை தொகுதிகள் + ராஜ்யசபா சீட் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சீட் எண்ணிக்கையை உறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

நேற்று ஒரே நாளில்
நேற்று ஒரே நாளில் காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. 2 கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி (ஐயூஎம்எல்), மனிதநேய மக்கள் கட்சி (மமக) ஆகிய கட்சிகளுடன் திமுக குழுவினர் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த தொகுதி பங்கீடு குறித்தான ஒப்பந்தம் கையெழுத்தானது. முஸ்லீம் லீக் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை
மேலும், காங்கிரஸ் கட்சி குழுவினரும் நேற்று காலை அண்ணா அறிவாலயம் வந்து திமுக குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் குழு கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை திமுக தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசியது. அப்போது, ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஸ்டாலினிடம் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் வலியுறுத்தி இருந்தார்.
ஆனால், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முதல்வர் ஸ்டாலின் ஏற்கவில்லை. இதற்கிடையே மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை சீண்டி வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி, விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்கக் கூடுமோ? என்ற சந்தேகங்களும் எழுந்தன.
திமுக தொகுதி பங்கீடு
எனினும், காங்கிரஸ் தலைமை, திமுக கூட்டணி என்பதில் உறுதியாக உள்ளது. திமுக எம்.பி கனிமொழி ராகுல் காந்தியை சந்தித்தும் பேசி இருந்தார். திமுக- காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் பேசக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் அண்மையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சி 29 தொகுதிகளைக் கேட்டதாகவும், திமுக தரப்பில் 23 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காங்கிரஸ் கேட்கும் சீட் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சி, முன்பு, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது 40+ தொகுதிகள் வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. எனினினும், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் வருகை காரணமாக தற்போது சீட் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையின்போது, கூட்டணி தர்மப்படி, நாங்களும் தொகுதி எண்ணிக்கையை எங்கள் எதிர்பார்ப்பில் இருந்து குறைத்துக்கொள்கிறோம் என்றுதான் காங்கிரஸ் குழுவினர் பேச்சை ஆரம்பித்துள்ளனர்.
29 சட்டசபை தொகுதிகள் வேண்டும் + 2 ராஜ்யசபா சீட் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால், திமுக தரப்பிலோ, கூட்டணி விரிவடைந்துள்ளதால் எல்லா கட்சியுமே கடந்த தேர்தலை விட குறைவான தொகுதிகளில் தான் போட்டியிடுகிறோம், கூட்டணி பெரிதாகி உள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது, அதனை கருத்தில் கொண்டு சீட்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என திமுக தரப்பில் கூறியுள்ளனர்.
திமுக சொல்லும் எண்ணிக்கை
காங்கிரஸ் கட்சிக்கு 23 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் தரலாம் என முடிவு செய்துள்ளதாக டிஆர் பாலு கூறியுள்ளார். காங்கிரஸ் குழுவினரோ, கடந்த முறையே, கூட்டணியின் நலன் கருதித்தான் 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டோம், அதைவிட குறைவான தொகுதிகளில் போட்டியிட்டால் இங்கு கட்சியை வளர்க்க முடியாது எனக் கூறியுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தைக்கு மீண்டும் அழைப்பதாக திமுக குழு கூறியுள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, "திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை சுமுகமாகவும், வெற்றிகரமாகவும் செல்கிறது. எங்களுக்கு என்ன தேவையோ அதனை கேட்டுள்ளோம். அவர்களும் அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா இடம் தருவதாக முதல்வர் கூறியுள்ளார்.
செல்வப்பெருந்தகை
எங்கள் கூட்டணி கொள்கை ரீதியான, இயற்கையான, உறுதியான, மதவாதத்துக்கு எதிரான கூட்டணி. இதனை சிதைக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம். எங்கள் கூட்டணி தமிழ் மண்ணை காக்கும் கூட்டணி. ஒருபோதும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடமில்லை.
ராகுல் காந்தி தமிழகத்தின் மீது பற்று வைத்துள்ளார். மதவாத சக்திகள் தமிழகத்தில் நுழைய நாங்கள் விடமாட்டோம். தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக கிரிஷ் சோடங்கர் சொல்லவில்லை. தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக வெளியான தகவல் வதந்தி. கிரிஷ் சோடங்கர் சொல்லாத கருத்தை, அவர் சொன்னதாக கூறுவது கண்டிக்கத்தக்கது. எங்கள் உயர் தலைமை திமுகவுடன் கூட்டணி நடத்தவே கூறியுள்ளது" என்று கூறினார்.
கிரிஷ் சோடங்கர்
அதனைத் தொடர்ந்து பேசிய தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "திமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவும், நம்பிக்கையுடனும் நடக்கிறது. எங்களுக்கு தேவையான தொகுதிகள் குறித்து கேட்டுள்ளோம். எங்களின் விருப்ப பட்டியலை திமுகவிடம் கொடுத்துள்ளோம். கடந்த முறையை விட அதிக தொகுதிகளை கேட்டுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் திமுக குழுவிடம் பேசியுள்ளோம். இதுகுறித்து இரு நாட்களில் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications