சில்லு சில்லாக போச்சே கூட்டணி.. திமுக அவங்க வேலையை பார்க்கட்டும்.. திருநாவுக்கரசர் சொன்ன சொல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக - காங்கிரஸ் இடையேயான கூட்டணி முறிவு மற்றும் தவெக ஆதரவு விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ள நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் போர் வெடித்துள்ளது. திமுகவின் கடும் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தனது கண்டனங்களை நாகரீகமான முறையில் பதிவு செய்துள்ளார். கடந்த கால கூட்டணி உறவுகளை நினைவூட்டி, அரசியல் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக அரசியல் களம் தற்போது திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான வார்த்தைப் போரால் அனல் பறந்து வருகிறது. திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துவிட்டதாகக் கூறி, அக்கட்சியின் மீது திமுக கடும் அதிருப்தியிலும், விமர்சனங்களிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், திமுகவின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தனது கட்சியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் காட்டமான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

சில்லு சில்லாக போன கூட்டணி கணக்கு

சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பி. ஆதித்தனாரின் 45-வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இந்த விவகாரத்தில் திமுகவின் போக்கை விமர்சித்தார். தமிழகத்தின் அறிவுப் புரட்சிக்கு வித்திட்ட ஆதித்தனாரின் பெருமைகளைப் போற்றிய திருநாவுக்கரசர், அரசியல் விவாதங்களுக்குள் நுழைந்தபோது மிகவும் கறாரான தொனியில் பேசினார்.

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கூட்டணியை நினைவூட்டிய அவர், "கடந்த பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தமிழ்நாட்டிலும் சரி, அகில இந்திய அளவிலும் சரி ஒரே கூட்டணியில் இருந்து ஒன்றாகச் செயல்பட்டு வந்துள்ளோம்.

திருநாவுக்கரசர் திமுக பற்றி சொன்னது என்ன

காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக உறுப்பினர்களும் பணியாற்றியுள்ளனர். சட்டமன்றம், நாடாளுமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ஒன்றாக இணைந்து வெற்றி பெற்றிருக்கிறோம். இன்றைய அரசியல் சூழலில் கூட்டணி பிரிந்து வேறு வேறு நிலைப்பாடுகளை எடுப்பது தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றும் அதிசயமான விஷயம் அல்ல. பல தேர்தல்களில் கட்சிகள் மாறி மாறி கூட்டணி அமைப்பது வழக்கமான ஒன்றுதான்," என்று சுட்டிக்காட்டினார்.

திமுகவின் இப்போதைய விமர்சனங்களுக்குப் பதிலளித்த மூத்த தலைவர் திருநாவுக்கரசர், "திமுக கூட்டணியில் இருந்து கொண்டே பிஜேபி கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம் பெற்ற காலம் உண்டு. காங்கிரஸ் - திமுக பலமுறை சேர்ந்தும் பிரிந்தும் செயல்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த காலங்களில் ஒன்றாகப் பயணித்ததை நினைவில் கொண்டு, திமுக இது போன்ற விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. உலகமே வியக்கும்படி ஒருவரை ஒருவர் தரக்குறைவாக விமர்சிப்பதும், மாறி மாறித் திட்டிக்கொள்வதும் தேவையற்றது; இது நாகரீகமும் அல்ல" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பாஜக வெற்றிக்கு காங்கிரஸ் காரணமா

தொடர்ந்து பேசிய திருநாவுக்கரசு, "திமுக அவர்கள் வேலையை அவர்கள் பார்க்கட்டும், காங்கிரஸ் தனது வேலையைப் பார்க்கட்டும். மக்கள் பணியாற்றுவதே சிறந்த அரசியல். ஒருவரை ஒருவர் தரக்குறைவாகத் திட்டுவதைப் பொதுவெளியில் நிறுத்திக்கொள்வதுதான் இரு தரப்புக்கும் நல்லது," என அறிவுறுத்தினார்.

பாஜகவின் வெற்றிக்குக் காங்கிரஸ் காரணம் என்று முன்வைக்கப்படுகிறதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், "இந்தியா முழுவதும் பாஜக வெற்றி பெற்றதால்தான் அவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள், காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கிறது. இதில் புதிதாகக் கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை. வரக்கூடிய காலங்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றி பெறும்," என்று தன்னம்பிக்கையுடன் கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அழுத்தமாக சொன்ன திருநாவுக்கரசு

தேர்தல் அரசியலில் கூட்டணியின் மாற்றம் என்பது இயல்பான ஒன்று என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கும் திருநாவுக்கரசரின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல், கூட்டணி முறிவால் ஏற்பட்டுள்ள விரிசலைச் சுட்டிக்காட்டும் திருநாவுக்கரசர், கடந்த கால நட்பை மதித்து அரசியல் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்துவதன் மூலம், திமுகவின் கடுமையான விமர்சனங்களுக்கு முதிர்ச்சியான முறையில் முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார். அரசியல் கூட்டணி மாற்றங்கள் இயல்பானவை என்பதை உணர்த்தும் அதே வேளையில், தனிப்பட்ட தாக்குதல்களைத் தவிர்த்து மக்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இதில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் மூத்த தலைவர் திருநாவுக்கரசர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+