வாசல் வரை தெரியும் பூசல்.. திமுகவின் டெல்டா 'டார்கெட்' - சவுண்டு பலமா இருக்கணுமாம்!
சென்னை: டெல்டா திமுக போட்டியிடும் தொகுதிகள் குறித்த ஒரு ரவுண்ட் அப் இந்த செய்தி.
எந்த தேர்தல் வந்தாலும் டெல்டா பகுதியில் வெற்றிப் பெறுவது என்பது ஒவ்வொரு கட்சியின் முக்கிய டார்கெட்டாக இருக்கும். முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் நிறைந்திருக்கும் டெல்டா, பல தலைவர்களை மக்கள் பிரதிநிதிகளாக கோட்டைக்கு அனுப்பியுள்ளது... கலைஞர் கருணாநிதி உட்பட.
அந்த வகையில், 2021 சட்டமன்ற தேர்தலில், திமுக களம் காணும் டெல்டா தொகுதிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.
- கரூர்,
- கிருஷ்ணராயபுரம்.
- குளித்தலை
- ஸ்ரீரங்கம்,
- திருச்சி மேற்கு,
- திருச்சி கிழக்கு
- திருவெறும்பூர்,
- லால்குடி,
- மண்ணச்சநல்லூர்,
- முசிறி,
- துறையூர்,
- பெரம்பலூர்,
- குன்னம்,
- ஜெயங்கொண்டம்,
- சீர்காழி,
- பூம்புகார்,
- வேதாரண்யம்,
- மன்னார்குடி,
- திருவாரூர்,
- நன்னிலம்,
- திருவிடைமருதூர்,
- கும்பகோணம்,
- திருவையாறு,
- தஞ்சாவூர்,
- ஒரத்தநாடு,
- பட்டுக்கோட்டை,
- பேராவூரணி,
- புதுக்கோட்டை,
- ஆலங்குடி
ஆகிய டெல்டா பகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் தஞ்சை, ஒரத்தநாடு, கும்பகோணம், நன்னிலம், வேதாரண்யம், உள்ளிட்ட பல மிக முக்கியமான டெல்டா சட்டமன்ற தொகுதிகளில் எப்போதும் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும். இந்த தொகுதிகளில், இதர கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் பெற்றாலே அது பெரிய சாதனை தான்.

தஞ்சை என்ஜாய்
இதில், தஞ்சை சட்டமன்ற தொகுதியில், அதிமுக வேட்பாளராக புதுமுகம் வி.அறிவுடைநம்பியை களமிறக்க, இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து ஒட்டுமொத்த தஞ்சை அதிமுகவினர் எழவில்லை. கரந்தை பகுதி செயலாளராக இருக்கும் அறிவுடைநம்பிக்கு தஞ்சைக்கு புதிய முகம் எனலாம். இதுவரை இந்த பெயரை தஞ்சை பகுதியில் பெரும்பாலானோர் கேட்டதில்லை. இதனால், அறிவுடைநம்பி வெற்றிப் பெற அதிமுகவினரே வேலை செய்வார்களா? என்பது சந்தேகமாக உள்ளது. ஆகையால், தஞ்சை தொகுதியில் திமுகவின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

திமுக தில்லுக்கு துட்டு
அதேபோல், பட்டுக்கோட்டையில் திமுகவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுகிறது. இங்கு, ஜி.கே.வாசனின் வலதுகரமும், மக்கள் செல்வாக்கு கொண்ட என்.ஆர்.ரங்கராஜன் களமிறங்குவது அல்மோஸ்ட் உறுதி செய்யப்பட்டுவிட்டது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் இவருக்கு நல்ல மக்கள் செல்வாக்கு உள்ளது. அடாவடி, ஆர்ப்பாட்டம், கட்டப்பஞ்சாயத்து இல்லாத இவரது அரசியல் பாணியால் மக்களிடையே இவர் மீது 'சாஃப்ட் கார்னர்' உள்ளது. இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் நிலையில், அங்கு யார் போட்டியிடுவது என்பது உறுதியாகிவிடும். திமுக யாரை நிறுத்தினாலும், அங்கு என்.ஆரை எதிர்த்து ஜெயிக்க முடியுமா? என்பதே அப்பகுதி நிலவரமாக உள்ளது.

தெறிக்கும் திருச்சி
அதேபோல், திருச்சி மாவட்டத்தை முழுவதுமாக கைப்பற்ற அன்பில் மகேஷ் தலைமையிலே சபதமே எடுக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள். திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், மணப்பாறை ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வெற்றி என்பது டார்கெட் அல்ல. அதிகப்படியான வாக்குகள் என்பதே மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடுத்திருக்கும் அசைன்மெண்ட். தவிர, 'ஸ்டாலின் தமிழகத்திற்கு என்ன செய்ய நினைக்கின்றாரோ? அதை செய்து முடிக்கின்ற முதல் மாவட்டமாக திருச்சி தெற்கு மாவட்டம் இருக்க வேண்டும்' என்று கட்சியினர் இடையே சமீபத்தில் சூளுரைத்திருக்கிறார் அன்பில் மகேஷ்.

மலருமா மன்னார்குடி?
மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில், கடந்த இருமுறையும் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டி.ஆர்.பி.ராஜா. முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மகன். ஆனால், மன்னார்குடியில் உட்கட்சி பூசல் வாசல் வரை தெரியும்படி உள்ளது. இதனால் மீண்டும் ராஜாவுக்கு அங்கு சீட் கிடைக்குமா? என்பதில் இழுபறி நீடிக்கிறது. அப்படி கிடைக்கும் பட்சத்தில் சொந்த கட்சியினரே அவரை தோற்கடிக்கும் நிலையே நிலவுகிறது.












Click it and Unblock the Notifications