“வரலாற்றின் குப்பை தொட்டியில் இப்படி எத்தனையோ பேர்..” ஆளுநர் மீது முரசொலி விமர்சனம்
சென்னை: ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான உரசல் போக்கு தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், 'ஆளுநர் மாளிகையே அடங்கு' என்கிற தலைப்பில், திமுக நாளேடான முரசொலி கட்டுரையை வெளியிட்டிருக்கிறது.
சட்டமன்றத்தில் முதல் உரையை ஆளுநர்தான் நிகழ்த்துவார். ஆனால், அவர் என்ன பேச வேண்டும் என்பதை தமிழக அரசுதான் சொல்லும். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரை, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் ஆளுநர் கூறலாம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். அல்லது, தமிழக அரசின் உரையை மாற்றி வாசித்து வருகிறார்.

இந்த ஆண்டின் முதல் உரையை ஆளுநர் புறக்கணித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் குறித்து முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில்,
"சட்டசபைக் கூட்டத்தில் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும் என்பது மரபு. ஆளும் கட்சி, எழுதித்தரும் உரையை வாசிக்க வேண்டும் என்பதே நெறிமுறை. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அனைத்து ஆளுநர்களும் இதனையே முறையாகக் கடைப்பிடித்து அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்கிறார்கள். ஆர்.என்.ரவியைப் போல் அழிச்சாட்டியம் செய்பவர்கள் ஒரு சிலரே!
அரசியலமைப்புச் சட்டப்படி நடந்து கொள்ளாதவர் மட்டுமல்ல; சட்டத்தை மீறியே செயல்படுபவர் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்துள்ளார். நாகலாந்தில் இருந்து விரட்டி விடப்பட்ட அல்லது பயந்து போய் ஓடிவந்து கிண்டியில் ஒளிந்து கொண்டுள்ளவர் இவர்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக பேசுவது, செயல்படுவதுதான் இவரது வழக்கம். ஆனால், ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை, தி.மு.க. அரசை 'அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான தை'ப் போல திசை திருப்பும் வகையில் அமைந்துள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்பதையே தொழிலாகக் கொண்ட பா.ஜ.க.வின் கூஜா தூக்கி ஒருவர், அரசியலமைப்பு சட்டத்துக்காக கண்ணீர் விடும் காட்சி போலித்தனமானது.
அவை நடவடிக்கை தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், முடிந்ததும் தேசிய கீதம் பாடுவதும் 35 ஆண்டுகளாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மரபாக இருக்கிறது. இதில் என்ன குறை கண்டார் ஆர்.என்.ரவி!
தேசிய கீதம் பாடக்கூடாது என்று சொன்னோமா? இல்லை. தேசிய கீதம் பாடப்படுகிறது. சட்டப்பேரவையில் மட்டுமா பாடப்படுகிறது? அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் பாடப்படுகிறது. முதலமைச்சர் உள்பட அனைவரும் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதை வழங்கித்தான் வருகிறார்கள். ரவிக்கு முன்னாலும் இதுதான் நடைமுறை. ரவி போனாலும் இதுதான் நடைமுறை. ஆனால் இவர் ஏதோ 'தேசியத்தின் பிள்ளையாக' நடிக்கிறார்! 'மன்னிப்புக் கடிதம்' கொடுத்து பிரிட்டிஷ் ஆட்சியிடம் கருணை காட்ட வேண்டி நின்ற கூட்டத்தின் சந்ததியான ரவி, தேசிய கீதத்துக்காக உருகுவதை யார் நம்புவார்?
தேசிய கீதம் பாடச் சொன்னாராம், அரசியலமைப்பு சட்ட கடமையை இவர் செய்யச் சொன்னாராம், இதை 'சிறுபிள்ளைத்தனமானது' என்று முதலமைச்சர் சொன்னது குற்றமாம். பேச வந்து, பேசாமல் போனதைத்தான் 'சிறுபிள்ளைத்தனமானது' என்றார் முதலமைச்சர்.
உரையை வாசிக்க நாள் குறித்து, கிண்டியில் இருந்து புறப்பட்டு வந்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, அவைக்குள் வந்து, வாசிக்கப்போகும் நேரத்தில் வாசிக்காமல் திரும்பி ஓடுவது 'சிறுபிள்ளைத்தனம்' அல்லாமல் வேறு என்ன? தேசியகீதம் பாடச் சொல்வதை சிறுபிள்ளைத்தனம் என்று சொல்லவில்லை.
அரசியலமைப்பு சட்ட அறிஞர்கள், மேதைகள், நீதியரசர்கள் நிறைந்த அவையில் போய்நின்று ரவி, தனது நடத்தையை விவரிக்கட்டும். அவர்கள் என்ன சொல்வார்கள்? இதையே ஆங்கிலத்தில் சொல்வார்கள்! 'THE HINDU' நாளிதழ் ( 7.1.2025 ) எழுதிய தலையங்கத்தை எடுத்து ஆர்.என்.ரவி வாசிக்கட்டும். சிறுபிள்ளைத்தனமான சேஷ்டையை நூற்றைம்பது ஆண்டு பாரம்பரியம் கொண்ட ஆங்கில நாளிதழ் கண்டித்துள்ளதே. இந்தத் தலையங்கம் படித்தவர்கள் அனைவரும் ரவியை எந்த லிஸ்டில் சேர்ப்பார்கள்?
உடனே, முதலமைச்சர் மீது களங்கம் கற்பிக்கிறது ஆளுநர் மாளிகை. பாரதத்தை ஒரு தேசமாகவும், அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக் கொள்ளாதவர். முதலமைச்சர் என்கிறது அந்த அறிக்கை. அப்படி யாராவது சொன்னோமா? யார் தேசத் துரோகி என்பதும், தேசத்துரோக வரலாறு யாருக்குச் சொந்தம் என்பதும் நாட்டு மக்கள் அறிவார்கள். எங்களுக்கு தேசபக்தியை, ஆர்.என்.ரவியிடம் நாங்கள்கற்க வேண்டிய நிலைமையில் இல்லை.
'ஆணவம்' என்கிறது ஆளுநர்மாளிகை. எது ஆணவம்? ஒரு ரிடையர்டுபோலீஸ் ஆபீஸர், பா.ஜ.க.வின் கூஜா தூக்கியாக இருப்பதால், யாரோ ஒருவரின் தயவால் ஆளுநராகி வந்து தமிழ்நாட்டையும், தமிழையும், தமிழ்நாடு சட்டமன்றத்தையும், கோடிக்கணக்கான மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் தினந்தோறும் செயல்படுவதுதான் ஆணவம் ஆகும். இங்கிருந்து துரத்தப்பட்டால் சீந்துவாரற்று ஏதோ ஒரு பங்களாவில் பதுங்கி வாழக் கூடிய மாஜி அதிகாரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்கு இணையாகஅல்லது அவரை விட மேலாக நினைத்துக் கொள்வது ஆணவத்தை விட தான்தோன்றித்தனம்.
யார் கொடுத்த தைரியத்தில் இந்த ஆணவ ஆட்டத்தை ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து போடுகிறீர்?
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் இப்படி எத்தனையோபேர் போய் விழுந்து கிடக்கிறார்கள்.
தாய்த் தமிழ்நாட்டையும், இந்திய நாட்டின் அரசியலமைப்பையும் காக்க எங்களுக்குத் தெரியும்.ஆளுநர் மாளிகையே அடங்கு! பிடிக்காவிட்டால் ஓடு" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications