பக்கா பிளானிங்.. லோக்சபா தேர்தலுக்கு ரெடியாகும் திமுக.. ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது மா.செ கூட்டம்
சென்னை: திமுக இளைஞரணி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்காக வேலையை ஆரம்பித்துவிட்டன.

தேசியளவிலும் சரி மாநில அளவிலும் சரி கூட்டணி தொடங்கி சீட் பகிர்வு வரை இப்போது பல அரசியல் கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டு காய்களை நகர்த்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவும் தேர்தலைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. திமுக சார்பில் ஏற்கனவே அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நத்தப்பட்டது. மண்டல வாரியாக நடத்தப்பட்ட கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் நேரடியாகக் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
மேலும், அடுத்த மாதம் திமுக சார்பில் இரண்டாவது இளைஞரணி மாநாடும் நடைபெறுகிறது. டிச. 17ஆம் தேதி நடைபெறும் இந்த மாநாடு சேலத்தில் நடைபெறுகிறது. இதைப் பிரம்மாண்டமாக நடத்தத் திமுக இளைஞரணி திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை 10.30 மணியளவில் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஒட்டலில் இந்த கூட்டம் தொடங்கியது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் நிலையில், இதில் இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்களின் பணிகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications