வடக்கு ஓவர்.. அடுத்து தென் மண்டல மாநாடு.. இளைஞரணியை தயார் செய்யும் உதயநிதி.. தேதி குறித்த திமுக!
சென்னை: திமுகவின் தென்மண்டல இளைஞரணி மாநாடு விருதுநகரில் ஜனவரி 24ஆம் தேதி நடத்த அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. அண்மையில் திருவண்ணாமலையில் திமுக வடக்கு மண்டல மாநாடு பிரம்மாண்டமாக நடத்தப்பட்ட நிலையில், அடுத்ததாக தென் மண்டல மாநாட்டை நடத்த திமுக தயாராகி வருகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் களமிறங்குவதால், இளைஞர்களின் வாக்குகளை கவர்வதற்கு திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் வடக்கு மண்டல மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியது.

அதேபோல் இளைஞரணியில் புதிதாக 5 லட்சம் நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டது. இதன் மூலமாக இளைஞர்களை திமுக பக்கம் கொண்டு வரும் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இருக்கிறார். அதேபோல் சட்டசபைத் தேர்தலில் இளைஞரர் அணி நிர்வாகிகளுக்கு 40 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் திமுக தலைமையுடன் கேட்டு வருகிறார்.
ஒவ்வொரு மாவட்டமாக உதயநிதி ஸ்டாலின் பயணித்து திமுக நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 2016 சட்டசபைத் தேர்தல் போல் 100, 200 வாக்குகள் வித்தியாசத்தில் கூட வெற்றி, தோல்வி மாறும் என்பதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியாக பணியாற்ற ஆலோசித்து வருகிறார். அதேபோல் இளைஞர்கள் வாக்குகளை அறுவடை செய்ய, ஒவ்வொரு மண்டலமாக மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறது திமுக.
வடக்கு மண்டல மாநாடு முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக தென் மண்டல மாநாட்டை விருதுநகரில் நடத்த திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. ஏற்கனவே மதுரையில் திமுக பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்டதால், தென் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க வசதியாக இருக்கும் இடமாக விருதுநகர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஜனவரி 24ஆம் தேதி திமுக தேதி குறித்துள்ளது. கடந்த தேர்தல் தென் மண்டலத்தில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்ற சூழலில், அதனை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கேற்ப தூத்துக்குடியை மையமாக வைத்து பல்வேறு தொழில் நிறுவனங்களையும், முதலீடுகளையும் கொண்டு வந்துள்ளது. இதனால் விருதுநகர் மாநாடு திமுகவுக்கு திருப்புமுனையாக இருக்கும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications