கோவை, சேலத்தில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம்? கட்சியினரை தனித்தனியாக அழைத்து கேட்ட உதயநிதி & டீம்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை, சேலம் மாவட்டங்களின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 சிறப்புக் குழுக்களை அமைத்தது திமுக. தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்; தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் 3 குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டார். அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிகள் ஒருங்கிணைப்புக் குழுவில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் கோவை, சேலம் மாவட்டங்களின் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு, முத்துசாமி , தங்கம் தென்னரசு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் இந்த மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளிடம், குழுவினர் தனித்தனியாக பேசினர்.
கோவை, சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளின் தற்போதைய கள நிலவரம், வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் யார் யார், தொகுதியில் கூட்டணிக் கட்சியினரின் பலம், தொகுதியில் சரி செய்ய வேண்டிய பிரச்சனைகள், திமுகவினரிடையே அதிருப்தி நிலவுகிறதா என்பது குறித்தெல்லாம் கேட்டறிந்தனர்.

இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திட, கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக்குழுவை அமைத்துள்ளார்கள். இக்குழுவின் சார்பில், சேலம் மக்களவைத் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கத்தில் இன்று நடைபெற்ற போது அதில் பங்கேற்றோம்.
இந்தக் கூட்டத்தின் போது, சேலம் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர், மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து தொகுதியில் தற்போதுள்ள சூழல் மற்றும் கள நிலவரம் குறித்து அவர்களின் கருத்துக்களை தனித் தனியாகக் கேட்டறிந்தோம்.

மேலும், சட்டமன்ற தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி பார்வையாளர்கள் - பாக முகவர்களின் பணிகளையும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைந்துள்ள விதம் தொடர்பாகவும் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இந்த சந்திப்பின் போது, சேலம் மேற்கு மாவட்டக்கழகம், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொங்கனாபுரம் மேற்கு ஒன்றியக்கழகச் செயலாளர் அண்ணன் பரமசிவம் அவர்கள் நம்மை சந்தித்தார்.
14 வயது முதல் கழகத்தில் பணியாற்றி வரும் அவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றியக் கழகச் செயலாளராக பணியாற்றி வருகிறார். கலைஞர் அவர்கள் - பேராசிரியர் தாத்தா - கழகத்தலைவர் அவர்கள் கையொப்பமிட்ட உறுப்பினர் அடையாள அட்டைகளை பெருமையுடன் நம்மிடம் காண்பித்தார். இந்தத் தேர்தல் இந்தியாவுக்கே முக்கியமான தேர்தல். தமிழ்நாட்டை காக்க ஓரணியில் நின்று தேர்தல் வெற்றிக்கு உழைப்போம் என வந்திருந்த அனைத்து நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பதிவில், "இந்திய ஒன்றியத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிற 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை - ஒருங்கிணைப்புக்குழு சார்பிலான ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பொறுப்பு அமைச்சர் , மாவட்ட கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் செயலாளர்கள், மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் இன்று தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டோம்.
தொகுதி நிலவரம் - தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் - கழக அரசின் திட்டங்களின் நிலை உள்ளிட்டக் கருத்துக்களை கேட்டறிந்தோம். வெறுப்பையும், வேற்றுமையையும் விதைக்கும் பாசிஸ்ட்டுகளை விரட்ட, இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு களத்தில் அயராது உழைப்போம் என கேட்டுக் கொண்டோம்." எனத் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications