அடி மேல் அடி.. அடுத்தடுத்த தீர்ப்புகளால் திக்குமுக்காடும் திமுக! ஒரே வாரத்தில் ’தலைமைக்கு’ தலைவலி.!
சென்னை: கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திமுக தலைமையை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் 5 நீதிமன்ற உத்தரவுகள் வந்திருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு, பொன்முடியின் சர்ச்சை பேச்சு வழக்கு, அமலாக்கத்துறை சோதனை வழக்கு, துரைமுருகன் சொத்து குவிப்பு, வழக்கு எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் சொத்து குவிப்பு வழக்கு ஆகிய தீர்ப்புகள் அடுத்தடுத்து திமுக தலைமைக்கு கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் திமுகவுக்கு அடுத்தடுத்து சிக்கல் உருவாகி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வருவது திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீதிமன்ற தீர்ப்புகள் திமுக தலைமையிலான அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மூத்த அமைச்சர்களாக கருதப்படும் துரைமுருகன், பொன்முடி, எம்ஆர்கே பன்னீர்செல்வம், புதுவரவான செந்தில் பாலாஜி ஆகியோர் தற்போது நீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடியில் இருக்கின்றனர். ஒரு வாரத்தில் அப்படி திமுக தலைமைக்கு நெருக்கடி தரும் வகையில் எந்தெந்த தீர்ப்புகள் இருந்தது என்பது குறித்து பார்க்கலாம்..

செந்தில் பாலாஜி
அதிமுக என கட்சிகளில் பயணித்து திமுகவில் ஐக்கியமானவர் செந்தில் பாலாஜி. கட்சியில் சேர்ந்த உடனே கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி, தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியும், தேர்தலில் வென்றவுடன் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. குறிப்பாக மின்சாரம் மதுவிலக்கு ஆகிய முக்கியத்துறைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து பணிக்காக லஞ்சம் பெற்றதாக அவரை அமலாக்கத்துறை 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் இலாக்கா இல்லாத அமைச்சராக பதவியில் நீடித்தார். தொடர்ந்து 2024 பிப்ரவரி மாதம் அவர் பதவி விலகிய நிலையில் செப்டம்பர் மாதம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்த மூன்றாவது நாள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றார்.
இந்த நிலையில் அமைச்சர் பதவியில் இருப்பதால் வழக்கில் விசாரணைக்கு இடையூறு ஏற்படும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என அதிரடியாக கேட்டதோடு வரும் திங்கட்கிழமை இது குறித்து தெரிவிக்க வேண்டும் என கண்டிப்பாக தெரிவித்து இருக்கிறது. இதனால் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.
துரைமுருகன்
அதே நாள் திமுக அமைச்சரவையில் மூத்த அமைச்சராகவும் திமுக பொதுச் செயலாளராகவும் இருக்கும் துரைமுருகனுக்கும் சிக்கல் வந்தது. 1996 - 2001 திமுக ஆட்சியில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. 2007 ஆம் ஆண்டு அந்த வழக்கிலிருந்து வேலூர் நீதிமன்றம் அவரை விடுவித்தது. 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
12 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அந்த உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் விசாரணையை தொடங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. நேற்று 2007 -2009 காலகட்டத்தில் 1.40 கோடி அதிகமாக சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் அவர்கள் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி
பெண்கள் குறித்தும், சைவம் வைணவம் குறித்தும் அவதூறாக பேசிய சர்ச்சையில் சிக்கினார் பொன்முடி. கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவிக்க திமுக துணை பொது செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து மன்னிப்பும் கேட்டார். இந்த நிலையில் ஏப்ரல் 17ஆம் தேதி பொன்முடி மீதான வழக்கு விசாரணையின் போது அவரது சர்ச்சை பேச்சு குறித்து வழக்கு பதிவு செய்யாதது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
22 ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் பொன்முடி தரப்பு அந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என வாதிட்டது. ஆனால் பொன்முடியின் பேச்சு வெறுப்பு வரம்பில் இருக்கிறது. கட்சி நடவடிக்கை எடுத்திருக்கும் நிலையில், காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கேட்டதோடு இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறை வழக்கு
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதுபான விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அந்த சோதனை சட்ட விரோதமானது என அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்ததோடு அமலாக்கத்துறை தொடர் நடவடிக்கை எடுக்கவும் அனுமதி அளித்தது. இதை அடுத்து டாஸ்மாக் மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை. இதுவும் தமிழக அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
எம்ஆர்கே பன்னீர்செல்வம்
ஏற்கனவே மூன்று முக்கிய அமைச்சர்கள் சிக்கலில் மாட்டி இருக்கும் நிலையில் இன்றும் திமுகவுக்கு ஒரு அதிர்ச்சியை காத்திருந்தது. எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்ததை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 2006 - 2011ஆம் ஆண்டு வரை அமைச்சராக பதவி வகித்த எம்ஆர்கே பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக மூன்று கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து.
இதில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் உட்பட மூன்று பேர் கடலூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மறு ஆய்வு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன் அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்ததை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டுமென கடலூர் சிறப்பு நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளார். இப்படி கடந்த ஒரே வாரத்தில் அடுத்தடுத்த நீதிமன்ற உத்தரவுகளால் அமைச்சர்களுக்கும் திமுக தலைமைக்கும் கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications