அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். அண்ணா அறிவாலயம் வந்த பெஞ்சமின், முன்னாள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். ஏற்கனவே இன்று காலை முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை பெஞ்சமின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டிருந்தார்.
தமிழக அரசியல் களத்தில் இன்று காலை முதலே நிலவி வந்த பெரும் பரபரப்புக்கு தற்போது கிளைமாக்ஸ் கிடைத்துள்ளது. அதிமுகவின் சென்னை மண்டல முக்கிய முகமும், முன்னாள் அமைச்சருமான பி. பெஞ்சமின், அதிமுகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகி திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த முக்கிய நிகழ்வில், ஸ்டாலின் முன்னிலையில் பெஞ்சமின் இணைந்தார்.

இன்று காலை எழும்பூர் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு உடன் பெஞ்சமின் நடத்திய ரகசிய ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அதிரடி அரசியல் மாற்றம் அரங்கேறியுள்ளது. அண்ணா அறிவாலயத்திற்குத் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமினை, திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக பெஞ்சமின் பதவி வகித்து வருகிறார். சென்னை புறநகர் மற்றும் மதுரவாயல் பகுதிகளில் அதிமுகவின் பலமிக்க அடையாளமாக விளங்கிய பெஞ்சமின், ஜெயலலிதா அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். அவர் தற்போது திமுகவிற்கு மாறியிருப்பது அதிமுகவிற்கு விழுந்த மிகப்பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்ற பெஞ்சமின், மதுரவாயல் பகுதியில் மிகவும் செல்வாக்கான நபராக இருந்து வருகிறார். பெஞ்சமின் விலகியதால், அந்த தொகுதியில் அதிமுகவின் கட்டமைப்பு முற்றிலும் பலவீனமடைந்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள் பலரும் அடுத்தடுத்து விலகி தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். ஆனால் பெஞ்சமின் திமுக பக்கம் சாய்ந்துள்ளார். ஏற்கனவே விசிகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு திமுகவில் இணைந்தார். இதனால் மாற்றுக் கட்சிகளில் இருந்து வருவோரை இணைக்கும் முடிவில் திமுக தீவிரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications