நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை.. பதவி நீக்கம் செய்ய முடியுமா? திமுகவின் பிளானே வேற!
சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் தர்காவை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கும் நிலையில், சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திமுக திட்டமிட்டிருக்கிறது. இந்த முயற்சி தோல்வியில் முடியும் என்று பாஜக அண்ணாமலை கூறியுள்ளார். இது ஓரளவு உண்மைதான் என்றும், ஆனால் திமுகவின் திட்டம் வேறு எனவும் உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.
நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்ற பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அதில், "நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நீதிபதி கொடுத்த தீர்ப்பு திமுகவுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தற்போது இந்தியா கூட்டணி எம்பிக்களிடம் கையெழுத்து வேட்டையை திமுக தொடங்கியுள்ளது. இந்த முயற்சி தோல்வியில்தான் முடியும்" என்று கூறியுள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் எனில், மக்களவையில் குறைந்தது 100 எம்பிக்களின் ஆதரவு இருக்க வேண்டும். இல்லையெனில் மாநிலங்களவையில் 50 எம்பிக்கள் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். இப்படி சப்போர்ட் கிடைத்தாலும் நீதிபதியை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட முடியாது. பதவி நீக்கம் தீர்மானம் கொண்டுவருவதற்காகத்தான் இந்த ஆதரவு அவசியம். தீர்மானம் கொண்டு வந்த பின்னர் அதை மூன்று பேர் கொண்ட குழு விசாரிக்கும்.
விசாரணை முடிந்தவுடன் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதில், 3ல் 2 பங்கு எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். இறுதியில் அவர்தான் பதவி நீக்கம் செய்வார். இப்படித்தான் உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும்.
மக்களவையில் இந்தியா கூட்டணியின் எம்பிக்களின் எண்ணிக்கை 235. மூன்றில் இரண்டு பங்கை விட இது குறைவு. 362 எம்பிக்கள் இருந்தால்தான் அது 3ல் 2 பங்கு என்று கருத முடியும். எனவே தீர்மானம் கொண்டு வந்தாலும் வாக்கெடுப்பில் நிச்சயம் தீர்மானம் தோல்வியடைந்துவிடும். இதைத்தான் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
ஆனால், திமுகவின் திட்டமே வேறு என்று உடன்பிறப்புகள் கூறுகின்றனர். அதாவது, தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து திமுக எம்பிக்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பார்கள். இது அனைத்தும் நாடாளுமன்ற சபை குறிப்பில் நிலைத்து இருக்கும். மட்டுமல்லாது, போதுமான கையெழுத்து கிடைத்தவுடன் 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும். இந்த குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் புகழ்பெற்ற சட்ட நிபுணர் ஒருவர் இருப்பார்.
இந்த குழு குற்றச்சாட்டை விசாரித்து, அதில் உண்மை இருக்கிறதா? என்பது குறித்து அறிக்கை அளிக்கும். நீதிபதியை நீக்குவதற்கு இந்த அறிக்கை அவசியம். அந்த வகையில் இந்தியா கூட்டணி தரப்பின் நியாயத்தை வெளிப்படுத்த இந்த அறிக்கை உதவும் என்று திமுக தலைவர்கள் கூறுகிறார்கள். அதேபோல நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து பொது தளத்தில் விவாதங்களை ஏற்படுத்தவும் இந்த தீர்மானம் பயன்படும். எனவேதான் தோல்வியடையும் என்று தெரிந்தும் திமுக இந்த தீர்மானத்தை கொண்டுவர முயற்சிக்கிறது. இதற்கு முன்னர் இப்படி எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications