எஸ் பி வேலுமணி இடங்களில் சோதனை: 'தி.மு.க அரசுக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை'.. எ.வ.வேலு சொல்கிறார்!
சென்னை: புகாரின் அடிப்படையில் எஸ் பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதாகவும் பழிவாங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
Recommended Video
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அவரது சகோதரர், ஆதரவாளர் வீடு உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக அதிரடி சோதனை நடத்தினார்கள்

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அமைச்சராக இருந்தபோது எஸ்.பி வேலுமணி தனது பதவி காலத்தில் அரசு ஒப்பந்தங்களை தனக்கு தெரிந்தவர்களிடம் வழங்கி முறைகேடு செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாகவும் தெரியவந்ததால் இந்த சோதனை நடைபெறுகிறது என்று லஞ்ச ஒழிப்புத் துறை விளக்கம் அளித்தது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அ.தி.மு.க குற்றச்சாட்டு
ரூ.13 லட்சம் ரொக்க பணம், நிதி பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு தொகைக்கான ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை கூறியது. ''இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. தி.மு.க அரசு மக்கள் பணியில் கவனம் செலுத்தாமல் அ.தி.மு.க.வை பழிவாங்குவதிலேயே குறியாக இருக்கிறது என்று அ.தி.மு.க குற்றம்சாட்டியது. இதே கருத்தை பா.ஜ.க.வும் கூறியது.

பழிவாங்கும் எண்ணம் இல்லை
இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் எஸ் பி வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்துவதாகவும் பழிவாங்கும் எண்ணம் திமுக அரசுக்கு இல்லை எனவும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கோவையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

புகாரின் அடிப்டையில் சோதனை
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவரது நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்து வருகிறது, பல்வேறு புகாரின் பேரில்இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. புகாரின் அடிப்படையில் சட்டத்தின்படியே லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் என்று எ.வ.வேலு கூறினார்.












Click it and Unblock the Notifications