6 வது முறையாக திமுக ஆட்சி.. சென்னை மாறியிருக்கா? பூந்தமல்லி யாத்திரையில் அண்ணாமலை ‛அட்டாக்’
சென்னை: திமுக பழைய அரசியலையே செய்து வருகிறது. தமிழகத்தில் 6வது முறை ஆட்சி அமைத்தாலும் கூட சென்னை இன்னும் மாறவே இல்லை என திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு நடந்த ‛என் மண் என் மக்கள்' யாத்திரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அண்ணாமலை ‛என் மண்; என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரையை தொடங்கினார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த யாத்திரை நாளை 200வது சட்டசபை தொகுதியாக சென்னை துறைமுகம் சட்டசபை தொகுதிக்குள் நுழைய உள்ளது.

நாளை யாத்திரையில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பங்கேற்க உள்ளார். பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் தான் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி சட்டசபை தொகுதியில் இன்று இரவு ‛என் மண்; என் மக்கள்' யாத்திரை நடந்தது.
பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட நசரத்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் அண்ணாமலை மற்றும் பாஜகவின் ஊர்வலமாக சென்றனர். இந்த வேளையில் வாகனத்தின் நின்றபடி அண்ணாமலை திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் என் மண் என் மக்கள் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த யாத்திரை என்பது நரேந்திர மோடியை 3வது முறையாக நாட்டின் பிரதமராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. நிச்சயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். இந்த யாத்திரை என்பது தமிழ்நாட்டை மொத்தமாக மாற்றும் யாத்திரையாக இருக்கும்.
தமிழகத்தில் இதற்கு முன்பு 5 முறை திமுக ஆட்சி செய்துள்ளது. இப்போது ஆறாவது முறையாக ஆட்சியில் உள்ளது. ஆனால் சென்னை மாறிவிட்டதா? என்றால் இல்லவே இல்லை என்பது தான் பதிலாக வரும். திமுக இன்னும் பழைய அரசியலையே செய்து வருகிறது'' என விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications