Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிக்கிய விஜயபாஸ்கர், ராஜேந்திர பாலாஜி, வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன்- அடுத்த மூவ் 'தனி நீதிமன்றம்’?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆகியோரைத் தொடர்ந்து தற்போது எஸ்.பி. வேலுமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீதும் சென்னை போலீசில் பணமோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனிநீதிமன்றம் அமைக்கும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளக் கூடும் என தெரிகிறது.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அமைச்சர்களாக இருந்த பலர் மீதும் திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. அத்துடன் அமைச்சர்களின் ஊழல் விவரங்களை அறிக்கையாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கவும் திமுக வலியுறுத்தியது.

ஆனால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், எந்த ஒருநடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் அதிமுக அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விரிவாக பேசியது திமுக. அத்துடன் திமுக ஆட்சி அமைந்தததும் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்; இதற்காக தனிநீதிமன்றம் அமைக்கப்படும் எனவும் திமுக தலைவர்கள் பேசினர். திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இது இடம்பெற்றிருந்தது. இருப்பினும் திமுக ஆட்சிக்கு வரும்போது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டிய சவாலான பணி இருந்தது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன் என படுபிஸியாக இருந்தது திமுக ஆட்சி. இதனையடுத்துதான் மெல்ல மெல்ல சாட்டையை கையில் எடுத்து சுழற்ற தொடங்கி இருக்கிறது திமுக அரசு.

எம்.ஆர். விஜயபாஸ்கர்

எம்.ஆர். விஜயபாஸ்கர்

முதலில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து கரூர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 25 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கொப்பரைகளுக்கு நடுவே பதுக்கி வைக்கப்பட்ட ஆவணங்கள், ரூ25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், வருமானத்துக்கு அதிகமாக 55% சொத்துகளை கரூர் விஜயபாஸ்கர் வாங்கி குவித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் 2016-ம் ஆண்டு எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தமக்கு ரூ2.51 கோடி சொத்துகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். 2021 சட்டசபை தேர்தலில் தமது சொத்து மதிப்பு ரூ8.62 கோடி என காட்டியிருக்கிறார் என்பதும் அந்த முதல் தகவல் அறிக்கையில் விளக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. போக்குவரத்து கழகங்களுக்கு உதிரிபாகங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் முறைகேடு குறித்து விசாரிக்க கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதும் நினைவில் கொள்ளத்தக்கது.

கே.டி. ராஜேந்திர பாலாஜி

கே.டி. ராஜேந்திர பாலாஜி

இந்த நிலையில் அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கே.டி. ராஜேந்திர பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மகேந்திரன் என்பவர் தொடர்ந்த அந்த வழக்கில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிலான 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கினார்; இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய்; திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும்,4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் ராஜேந்திர பாலாஜி வாங்கினார். அதன் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் ஆவணங்களுடன் குறிப்பிட்டிருந்தார். வருமானத்துக்கு அதிகமாக ரூ7 கோடிக்கு சொத்து குவித்தார் ராஜேந்திர பாலாஜி என்ற அந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை தொடரலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் கோவை ஆவின் நிறுவனத்தில் மட்டும் ரூ100 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகவும் தீபாவளி தினத்தன்று ஆவின் நிறுவனத்தில் இருந்து சுமார் 1.5 டன் இனிப்புகள் இலவசமாக ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவே ராஜேந்திர பாலாஜி டெல்லி சென்று பாஜகவில் இணையப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

கோவை எஸ்.பி.வேலுமணி

கோவை எஸ்.பி.வேலுமணி

தற்போது மற்றொரு அதிமுகவின் முன்னாள் அமைச்சரான எஸ்.பி. வேலுமணி மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான 53 இடங்களில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எம்.எல்.ஏ. விடுதியில் எஸ்.பி.வேலுமணியிடம் அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுகவின் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 பண மோசடி புகாரில் உடுமலை ராதாகிருஷ்ணன்

பண மோசடி புகாரில் உடுமலை ராதாகிருஷ்ணன்

கரூர் விஜயபாஸ்கர், கேடி ராஜேந்திர பாலாஜி, எஸ்.பி.வேலுமணியைத் தொடர்ந்து அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மீது புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்த தேவேந்திரன், தலைமைச் செயலகத்தில் தற்காலிக அலுவலக உதவியாளராக பணிபுரிந்தார். 2018ஆம் ஆண்டு கால்நடை துறையில் அலுவலக உதவியாளர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு வெளியானது. 6 பேருக்கு இந்த பணியை பெற்றுத்தரக் கோரி முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் ரமேஷிடம் ரூ1.5 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளார். ஆனால் இந்த காலி பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால் தேவேந்திரனிடம் பணம் கொடுத்த 6 பேரும் நெருக்கடி தந்துள்ளனர். இதையடுத்து தாம் கொடுத்த ரூ1.5 கோடி பணத்தை ரமேஷிடம் திருப்பிக் கேட்டுள்ளார் தேவேந்திரன். ஆனால் உடுமலை ராதாகிருஷ்ணன் உதவியாளர் ரமேஷ், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடுமலை ராதாகிருஷ்ணனிடம் முறையிட்டும் அலைகழிக்கப்பட்டிருக்கிறார் தேவேந்திரன். இதனையடுத்து சென்னை காவல் ஆணையரிடம் மாஜி அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரமேஷ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவேந்திரன் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அடுத்தது தனிநீதிமன்றம்?

அடுத்தது தனிநீதிமன்றம்?

அதிமுக மாஜி அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயத் தொடங்கிவிட்டன. வழக்கம் போல அதிமுக இதை அரசியல் பழிவாங்கல் என மழுப்பத்தான் செய்யும். ஆனால் இவர்கள் பதவியில் இருந்த போதே இந்த ஊழல் முறைகேடு புகார்கள் சுமத்தப்பட்டவை; நீதிமன்ற படிக்கட்டுகள் ஏறியவை. இதனால் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி அடுத்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க மட்டுமே ஒரு தனிநீதிமன்றத்தை அமைக்கக் கூடும். ஏற்கனவே எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க என ஒரு சிறப்பு நீதிமன்றம் உள்ளது. இருந்த போதும் ஊழல் வழக்குகளில் விசாரணையை விரைவாக முடிக்க வேண்டும்; தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்பதற்காக தனிநீதிமன்றத்தை திமுக அரசு அமைக்கக் கூடும் என்றே கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+