"ஜெ ஜெ".. திமுகவை நம்பினோர்.. கைவிடப்படார்.. அதிமுகவின் 5 புள்ளிகள்.. தட்டிதூக்கி சீட் தந்த ஸ்டாலின்
அதிமுகவின் 5 புள்ளிகளுக்கு இன்று ஸ்டாலின் சீட் தந்துள்ளார்
சென்னை: இன்றைய தினம் திமுகவின் வேட்பாளர் லிஸ்ட் வெளியாகி உள்ளது.. இதில் மொத்தம் 5 வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை திருப்பி உள்ளனர்.. அவர்கள் யார்? எதற்காக? என்ன விசேஷம்? என்று பார்ப்போம்?
பொதுவாக, மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனே கட்சி பதவியும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்படுவதில்லை என்பது நிலைப்பாடு... ஆனால் இப்போது வேறு வழியில்லை..
பலம்பொருந்திய எதிர்க்கட்சிகளை சமாளிக்க, இத்தகைய இந்த நிலைப்பாடை மாற்றிக் கொள்ளவேண்டிய சூழலுக்கு திமுக தள்ளப்பட்டுள்ளது... அந்த வகையில் 5 பேருக்கு சீட் தந்துள்ளது. அவர்கள், லட்சுமணன், தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி, ராஜ கண்ணப்பன், மார்க்கண்டேயன் ஆவார்கள்.

லட்சுமணன்
விழுப்புரத்தை சேர்ந்த லட்சுமணன் திமுகவுக்கு தாவியபோது, உண்மையில் அதிர்ந்துபோனது அதிமுக இல்லை... விழுப்புரத்தில் உள்ள திமுகவின் 2-ம் கட்ட தலைவர்கள்தான் சற்று கலங்கிவிட்டனர்.. அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்றவர்.. பண பலம் மிக்கவர்.. கடந்த முறை பொன்முடியால் ஏற்பட்ட அதிருப்தி இன்னும் இந்த தொகுதியில் அகலவில்லை.. மேலும் விழுப்புரத்தில் சிவி சண்முகத்தை சமாளிக்க சரியான நபரும் தேவையாகிறது.. அதனால், லட்சுமணனுக்கு சீட் தந்தால், சண்முகம் அளவுக்கு வாக்குகளை பெறுவார் என்று திமுக பலமாக நம்புகிறது..

நம்பிக்கை
அடுத்ததாக ராஜகண்ணப்பன்.. 1991-1996 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை, மின்சாரத் துறை, நெடுஞ்சாலைத் துறை என முப்பெரும் துறைகளின் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர்.. அதிருப்தியால் திமுகவுக்கு வந்தார்.. இங்கு சீட் தராததால் மறுபடியும் அதிமுகவுக்கு சென்றார்.. அங்கு முக்கியத்துவம் குறைந்ததால் மறுபடியும் யூ-டர்ன் செய்து திமுகவுக்கு வந்தார். ஆனால், இந்த முறை இவரை எங்கும் விடாமல் லபக்கென திமுக பிடித்து கொண்டது.. காரணம், தென்மண்டலங்களில் உள்ள யாதவர் ஓட்டுக்களை அப்படியே திமுக பக்கம் திருப்பி கொண்டு வந்துவிடுவார் என்பதால்தான்.

தங்கம்
மற்றொருவர் தங்க தமிழ்ச்செல்வன்.. ஓபிஎஸ்-க்கு நிகராக தேனி மாவட்ட அதிமுகவில் செல்வாக்கு பெற்றவர்.. அமமுகவுக்கு சென்றபோதும் இந்த செல்வாக்கு இவருக்கு குறையாமல் இருந்ததே அதற்கு சாட்சியாகும்.. இதன்பிறகு திமுகவில் இணைந்தார்.. அதிமுக மண் என்று சொல்லப்பட்ட தேனி தொகுதியை திமுக மண்ணாக திருப்ப பெரும்பாடு பட்டு வருகிறார்.. இந்த முறை ஓபிஎஸ்-ஸை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார்.. அவரை மட்டும் தோற்கடித்துவிட்டால், அமைச்சர் பதவியை வழங்க ரெடியாக இருப்பதாக திமுக தலைமையே சொல்லி இருக்கிறதாம்.. அதிமுக, அமமுகவின் பிம்பமாக பார்க்கப்பட்ட தங்க தமிழ்செல்வன், தன் "நிற"த்தை மாற்றி கொண்டு வெற்றி பெறுவாரா என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான்.

மார்க்கண்டேயன்
அடுத்த விஐபி மார்க்கண்டேயன்.. விளாத்திகுளம் பிரபலம் இவர்.. கடந்த 2019-ல் விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது.. அப்போது இவருக்கு அதிமுக சீட் தரவே இல்லை.. அவருக்கு பதில் சின்னப்பனை வேட்பாளராக அறிவித்துவிட்டது.. உடனே சின்னப்பனை எதிர்த்து மார்க்கண்டேயன் சுயேட்சையாக போட்டியிட்டார்... இதனால் டென்ஷன் ஆன அதிமுக அவரை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டது. அதற்குபிறகுதான் திமுகவில் வந்து சேர்ந்தார். இவருக்கு இப்போது வாய்ப்பு தரப்பட்டுள்ளதால், தூத்துக்குடி திமுக ஏக குஷியில் உள்ளது.

செந்தில்பாலாஜி
இன்னொருவர், செந்தில்பாலாஜி.. அரவக்குறிச்சி தொகுதி.. இவர் எந்த கட்சியில் இருக்கிறாரோ, அந்த கட்சி நிம்மதியாக இருக்க வேண்டியதுதான்.. இவரை நம்பி அந்த தொகுதியை தந்துவிட்டால் போதும்.. "டாப் டூ பாட்டம்" என மொத்தத்தையும் அதிர வைத்துவிடுவார்.. செல்வாக்கும், பண பலமும், இவரிடம் அதிகம்.. அதிமுகவே இவரை கண்டு திணறிபோய் உள்ளது.. இப்போதைக்கு ஒரே குறி அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்தான்.. நேரடியாக இவர்கள் இருவரும் இந்த முறை மோத உள்ளனர் என்பதால், தொகுதி மக்களின் டென்ஷனுக்கு பஞ்சமிருக்காது.

நன்மதிப்பு
இதில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டி உள்ளது.. இவர்கள் எல்லாருமே ஜெயலலிதாவின் விசுவாசிகள்.. அவரின் நன்மதிப்பை பெற்றவர்கள்.. அவர் இறந்துவிட்ட சூழலில்தான், முக்கியத்துவம் இல்லாமல் திசை மாறிய பறவைகளாக திமுகவில் வந்து ஐக்கியமாகி உள்ளனர்.. அப்படி ஐக்கியமானவர்களை அசால்ட்டாக விட்டுவிடாமல் அரவணைத்தும் நம்பியும் சீட் தந்து அழகு பார்த்துள்ளது திமுக..!












Click it and Unblock the Notifications