நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு! திமுகவில் வெடித்த மோதல்.. முதல் அட்டாக்
சென்னை: நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு என்று திமுக முன்னாள் எம்எல்ஏ ஐ பரந்தாமன் அமைச்சர் சேகர்பாபுவை விமர்சனம் செய்து உள்ளார். மு.க ஸ்டாலின் அவரின் கொளத்தூர் தொகுதியில் தோல்வி அடைய சேகர் பாபு காரணம் என்ற ரீதியில் திமுக முன்னாள் எம்எல்ஏ ஐ பரந்தாமன் போஸ்ட் செய்துள்ளார்.
ஐ பரந்தாமன் முன்பு எழும்பூர் தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் இவருக்கு சீட் கிடைக்காமல் போக சேகர் பாபு காரணம் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான் திமுகவின் தேர்தல் தோல்விக்கு பின் ஐ பரந்தாமன் செய்துள்ள போஸ்டில், எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.

அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம் திமுக.
எனக்கு இரவு முழுவதும் உறக்கமில்லை இந்த முகமே என் கண்களை மூடினாலும் வந்துகொண்டே இருக்கிறது.
— I Paranthamen - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@iparanthamen) May 5, 2026
அப்பழுக்கற்ற அரசியல் தலைவர்!
யாருக்கும் தீங்கு நினைக்காத தலைவர்!
குழந்தை உள்ளம் கொண்ட தலைவர்!
தேர்தல் அரசியலில் வெற்றி தோல்வி என்பது இயற்கை இவை இரண்டின் உச்சத்தையும் பார்த்த இயக்கம்… pic.twitter.com/fhAPceCLOO
ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான்.
தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்?
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா @PKSekarbabu என்று சேகர் பாபுவை டேக் செய்து கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்டாலின் தோல்வி
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக அரசியல் வரலாறு காணாத ஒரு பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. நேற்று ஆரம்பம் முதலே முன்னிலை வகித்து வந்த தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தற்போது 108 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுக 72 இடங்களிலும், அதிமுக 55 இடங்களிலும் தங்களது வெற்றியை உறுதி செய்யும் முனைப்பில் உள்ளனர்.
இந்தத் தேர்தலின் மிகப்பெரிய அதிர்ச்சியாகப் பார்க்கப்படுவது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தோல்விதான். திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட சென்னை கொளத்தூர் தொகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக வெற்றி வாகை சூடி வந்த ஸ்டாலின், இந்த முறை தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவிடம் சுமார் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
கொளத்தூர்: சரிந்த சரித்திரம்
2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதி உருவாக்கப்பட்டதிலிருந்து மு.க. ஸ்டாலின் இங்கு தோல்வியையே சந்தித்ததில்லை. 2011-ல் அதிமுகவின் சைதை துரைசாமியை எதிர்த்துப் போட்டியிட்டபோது கடினமான போட்டியில் வெற்றி பெற்றார். பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் முறையே 37,000 மற்றும் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அத்தொகுதியைத் தனது தனிப்பட்ட செல்வாக்கின் அடையாளமாக மாற்றியிருந்தார். ஆனால், இந்த முறை தவெக-வின் எழுச்சி அவரது கோட்டையைத் தகர்த்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல் சுற்றிலிருந்தே ஸ்டாலின் பின்னடைவைச் சந்தித்து வந்தது தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இறுதியில் வி.எஸ். பாபுவின் வெற்றி உறுதியானபோது, அது திமுகவின் ஒட்டுமொத்த தேர்தல் வியூகத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அறிவாலயத்தில் நிலவும் சோகம்: சோர்ந்த முகத்துடன் ஸ்டாலின்
தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வழக்கமான ஆரவாரம் இன்றி அமைதி நிலவுகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவிற்கு இடங்களைப் பிடித்திருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்து இத்தகைய பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது அக்கட்சியினரை நிலைகுலையச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications