”12 ஆண்டுகளுக்கு முன்பே செய்த திமுக” தமிழ் வளர்ச்சியில் அமித் ஷாவின் அக்கறை.. நன்றி கூறிய பொன்முடி!
சென்னை: தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்ய தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வைத்த வேண்டுகோளுக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட முதலாம் ஆண்டு மருத்துவக் கல்வி பாட புத்தகங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் 13 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடற்கூறியல், உடலியல், உயிர் வேதியியல் ஆகிய 3 இளநிலை மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் இந்தியில் கற்பிக்கப்படவுள்ளன.

தமிழக அரசு பதில்
இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தரப்பில் தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுப்பப்பட்டு வந்தன. இதற்கு தமிழக அரசு தரப்பில், 12 ஆண்டுகளுக்கு முன்பே திமுக தமிழில் பொறியியல் கல்வியை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டது. மருத்துவப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பதில் அளிக்கப்பட்டது.

அமித் ஷா பேச்சு
இதனிடையே நேற்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், தமிழ் மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்மொழியில் மருத்துவம், தொழில்நுட்ப படிப்புகளை படிக்கும்போது, மாணவர்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும். ஆராய்ச்சிகளில் ஈடுபடவும், தாய்மொழியின் வளர்ச்சிக்கும் இது உதவும் என்று தெரிவித்தார்.

பொன்முடி பதில்
இதற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 12 ஆண்டுகளுக்கு முன்பே பொறியியல் கல்வியை தமிழில் திமுக அறிமுகம் செய்துவிட்டது. மருத்துவப் படிப்புக்கான பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக 3 பேராசிரியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் ஆட்சி மொழி
தமிழ்மொழிக்கு சமஸ்கிருதத்துக்கு இணையாக நிதியுதவி வழங்க வேண்டும். இந்திக்கு இணையாக தமிழுக்கு ஆட்சிமொழி தகுதியை வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயத் தமிழ் பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை ஆட்சி மொழியாக்க உதவிட வேண்டும்.

அமித் ஷாவிற்கு நன்றி
அதேபோல் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல் தமிழ் மொழி வளர்ச்சியில் அக்கறை காட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications