அக்னியில் ஆவேசமான ஸ்டாலின்.. உருண்ட தலைகள் லிஸ்ட் கிடுகிடு.. கியரை மாற்றினாரா தமிழக முதல்வர்?
சென்னை: மே மாதத்தில் மேஷ ராசியில் சூரியன் உச்சத்தில் இருக்கும் போது அக்னி வெயில் தகிக்கும். அதுபோல திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அக்னி சூடு பரவி வருகிறது.
நிர்வாகிகள் பலரது செயல்பாடுகள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை கோபமடைய வைத்துள்ளது. ஆட்சியை விட கட்சியின் நலன் முக்கியம் என்று கூறி வரும் முதல்வர் ஸ்டாலின் கெட்ட பெயர் ஏற்படுத்தி வரும் நிர்வாகிகளை களையெடுக்கத் தொடங்கியது இந்த மே மாதம்தான்.
கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த போதே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என்று சொன்னார் முதல்வர் ஸ்டாலின். பல நிர்வாகிகள் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படும் வகையில் தான் நடந்து கொண்டனர். அமைச்சர்கள் சிலர் பேசியதும் ட்ரோல் செய்யப்பட்டது. இதன் காரணமாக தூக்கமின்றி தவிப்பதாகவும் பொது வெளியில் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்படியும் சிலர் கேட்பதாக இல்லை. இதனையடுத்து சாட்டையை சுழற்ற ஆரம்பித்து விட்டார். அடுத்தடுத்து கட்சி நிர்வாகத்திலும் ஆட்சி நிர்வாகத்திலும் அதிரடி மாற்றங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன. விரைவில் வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின். அதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர்களுக்கும் முக்கிய நிர்வாகிகளும் ஆன்லைன் மீட்டிங் நடத்தி பல முக்கியமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளாராம்.
மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் பலருக்கும் நிறைய ஆசைகள் இருக்கலாம். அது தப்பில்லை. அதே நேரத்தில் இப்போது உள்ள பதவியின் பொறுப்பு அறிந்து செயல்பட வேண்டும் என்று கூறினாராம். பதவியில் இருப்பவர்கள் கட்சி கட்டுப்பாடுகளை மதிக்காமல் ஆட்டம் போட்டால் உள்ளதும் பறி போய் விடும் என்று கூறியதோடு கட்சிப்பொறுப்பு யாருக்கும் நிரந்தரமல்ல என்று டோஸ் விட்டிருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலினின் எச்சரிக்கையை மீறியதாலேயே திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளரை மாற்றியுள்ளார். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட மிசா பாண்டியனை கட்சியை விட்டே நீக்கியுள்ளார். கட்சியை பலவீனப்படுத்தும் எந்த செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னதோடு அதை செயலிலும் காட்டத் தொடங்கி விட்டார் முதல்வர் ஸ்டாலின்.
லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ள நிலையில் இப்போது முதலே ஆட்சி நிர்வாகத்திலும் சில மாற்றங்கள் செய்யதோடு உயரதிகாரிகளையும் மாற்றியுள்ளார். இந்த மே மாதத்தில் மட்டும் பல அதிரடி மாற்றங்களை செய்து அதிகார தொனியில் செயல்பட்ட பலரையும் ஆட்டம் காண வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.
* மே 9 ஆம் தேதியில் இருந்தே கட்சியில் அதிரடிகள் ஆரம்பித்து விட்டன. பால் வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் நீக்கப்பட்டார். 30 ஆண்டு கால நட்பு. அதை கூட கவனத்தில் கொள்ளாமல் கட்சி நலனுக்காக நடவடிக்கை எடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். டிஆர்பி ராஜாவிற்கு அமைச்சராக புரமோசன் கிடைத்தது.
* மே 11ஆம் தேதி அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியடைக்கப்பட்டது. நிதித்துறை, தொழில்துறை, பால்வளத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறையில் மாற்றங்கள் நடைபெற்றன.
* மே 17ஆம் தேதி 16 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 48 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மக்களிடம் சரியான முறையில் அரசின் திட்டங்கள் சென்று சேர வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
* மே 21 திருநெல்வேலி மாவட்ட திமுக செயலாளர் மாற்றம் செய்யப்பட்டார். மதுரை முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, திமுக நிர்வாகிகள் பலரும் தொண்டர்களை சந்திப்பதில்லை என்ற குறை உள்ளது, தொண்டர்களை நேரடியாக சந்தித்து பேசுங்கள். அவர்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேளுங்கள். அப்போதுதான் தேர்தல் நேரத்தில் அனைவரும் உற்சாகமாக பணியாற்றுவார்கள். ஒத்துழைப்பு கொடுக்காதவர்கள் மீது புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கும் தொணியில் முதல்வர் பேசியது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெளிநாடு போய் திரும்பும் முன்பாக இன்னும் என்னென்ன மாற்றங்கள் நடக்குமே என்று ஆடிப்போயிருக்கிறார்கள் திமுக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications