Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் தொகுதியில் மீண்டும் கதிர் ஆனந்தை களமிறக்கிய திமுக தலைமை.. பின்னணி காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த முறை வேலூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கதிர் ஆனந்துக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்கியுள்ளது திமுக தலைமை. பல வாரிசுகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் கதிர் ஆனந்திற்கு வேலூர் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் களம் அனல் பறக்கிறது. தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

DMK leader fielded Kathir Anand again in Vellore constituency Check the reason

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் 10 தொகுதிகளும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கை வேட்பாளர் பட்டியலை அறிவித்த கையோடு தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார் முதல்வர் ஸ்டாலின். 21 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்ட உடன் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பலருக்கும் ஏற்பட்டது சிட்டிங் எம்.பிக்களில் 10 எம்.பி.க்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. 11 புதுமுகங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு சீட் வழங்கப்படுவது சந்தேகம் என்றே கூறப்பட்டு வந்தது. ஏனென்றால் 2019ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் கடும் போட்டிகளுக்கு இடையே அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை சுமார் 8000 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

மேலும், வேலூர் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆகையால் இந்த தொகுதியில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டி வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் களமிறங்க உள்ளதாகவும், கதிர் ஆனந்த் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால், வேலூர் தொகுதியில்தான் போட்டி என்பதில் கதிர் ஆனந்த் உறுதியாக இருந்தார். யாரும் எதிர்பாராத விதமாக மீண்டும் வேலூர் மக்களவை தொகுதி கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது. தகவலின்படி, கதிர் ஆனந்த் தொகுதிக்காக செய்த வேலைகளை வைத்தே அவருக்கு மீண்டும் சீட் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

இதற்கு உதாரணமாக சில திட்டங்களும் சொல்லப்படுகிறது. சென்னை-பெங்களூர் ஹைவேயில் உள்ள சத்துவாச்சாரி பகுதிதான் ஒட்டுமொத்த வேலூருக்கும் மையமாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி ஆர்டிஓ வரை இங்குதான் அமைந்திருக்கிறது. ஆனால், சத்துவாச்சாரி மக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்க நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்தனர். முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன.

எனவே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றியது கதிர் ஆனந்த்தான். மட்டுமல்லாது வேலூரில் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு வர நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் அதிகமான முறை குரல் எழுப்பியிருந்தார்.

வேலூர் லோக்சபா தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார் என, எம்பிக்கள் குறித்த பரிசீலனை ரிப்போர்ட்டில் கதிர் ஆனந்த் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். இது தவிர, வந்தே பாரத் ரயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் முக்கிய பங்காற்றியது, கே.வி.குப்பம் ஒன்றியம் சுங்கச்சாவடி வசூல் மையம் வராமல் தடுக்கப்பட்டது என தொகுதி மக்களின் பாராட்டையும் கட்சி மேலிடம் கவனித்திருந்தது.

அதே நேரத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்று ஏசி.சண்முகம் வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முறையும் வேலூர் தொகுதியின் இஸ்லாமியர்களின் வாக்குகள் தன்பக்கம் திரும்பும் என்றும் உறுதியுடன் நம்பியே, தேர்தலுக்கான வேலையையும் கடந்த வருடமே ஆரம்பித்துவிட்டார் ஏசி சண்முகம். தாமரை சின்னத்திலேயே ஏசி சண்முகம் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். பாமக கூட்டணியில் இருப்பதும் ஏசி சண்முகத்திற்கு கூடுதல் பலம்.

ஏசி சண்முகம் முதலியார் சமூகத்தை சேர்ந்தவர். வேலூரில் முதலியார் மற்றும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். எனவே, சண்முகத்திற்கு போட்டியாக வன்னியர் சமூகத்தை சேர்ந்த கதிர் ஆனந்தை நிறுத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு திமுக தலைமை மீண்டும் கதிர் ஆனந்துக்கு வாய்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. தனக்கு வாய்ப்பு வழங்கியது குறித்து பேசிய கதிர் ஆனந்த், "என்னை இந்த தொகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். மண்ணின் மைந்தர், அதனால் நிச்சயம் வெற்றி பெறுவேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+