மிரள வைக்கும் திமுக வியூகங்கள்.. 9 மாவட்ட செயலாளர்களுடன் நாளை ஸ்டாலின் மீட்டிங்.. சம்திங் சம்திங்!
சென்னை : ஊரக பகுதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தகுதியுள்ள வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கான ஒதுக்கீடு, வெற்றிவாய்ப்பு, போட்டியிடும் இடங்களில் உள்ள பிரச்சினைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான தேதிகள் இந்த மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்கிற நிலை உள்ளது.
வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் ஊரக பகுதி தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களில் அனைத்து தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள்.

உள்ளாட்சி தேர்தல்
வார்டு வரையறை செய்வது, வாக்குச்சாவடிகள் அமைப்பது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளையும் விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த 9 மாவட்ட ஊரக பகுதி தேர்தலை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

பாஜக கூட்டணி
இதனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவை பொறுத்தவரை, உள்ளாட்சி தேர்தலில் தனித்தே போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் மேலிடத்தை வற்புறுத்தி வருகிறார்களாம். ஆனால் அதிமுக மேலிடமோ பாஜவை கூட்டணியில் கழட்டிவிட முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதிமுக தற்போது அக்கட்சியின் அவை தலைவர் மதுசூதனன் மறைவு காரணமாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

திமுக ஆலோசனை
இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் திமுக மாவட்ட செயலாளர்களுடன் விவாதிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். நாளை ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.

வேட்பாளர்கள் போட்டி
திமுகவின் 9 மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் யார் யாரை எந்த பகுதிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கலாம் என்று மாவட்ட செயலாளர்கள் தங்கள் ஆலோசனையை தெரிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது.தேனியை தவிர அத்தனை தொகுதியிலும் திமுக கூட்டணியே வென்றது. அதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சித்தேர்தலிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது, அடுத்த 2 வருடத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு வலுவான வெற்றியை பெற்றது. திமுகவுக்கு வெற்றியைக் கொடுத்த பகுதிகள் வடமாவட்டங்கள் ஆகும். குறிப்பாக காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் பகுதிகளில் பெரும் வெற்றியை பெற்றது. எனவே இந்த பகுதிகளில் நடக்க உள்ள ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வசமாக்க திமுக விரும்புகிறது. இந்த பகுதிகளில் திமுகவே வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் வேட்பாளர்களாக ஆவதற்கு கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.

பாமக கூட்டணி
இதற்கிடையே திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளுக்கும் வட மாவட்டங்களில் பெரிய வாக்கு வங்கி உள்ளது. எனவே அந்த கட்சிக்கும் குறிப்பிட்ட அளவு இடங்களை ஒதுக்கவேண்டியிருக்கும் என்பதால். அதுதொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. பாமகவும் திமுக உடன் நெருக்கமாக மாறிவருவதால் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத வகையில் உள்ளது. ஏனெனில் ராமதாஸுக்கு பிறந்த நாள் பரிசு தரும் வகையில், வன்னியர் உள்இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தி ஆணையிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுவும் வட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றிக்கு திமுகவிற்கு உதவும் என்று கருதப்படுகிறது.
Recommended Video

விழுப்புரம்
திமுகவின் வியூகங்கள் பலமாக இருந்து வரும் நிலையில் பட்ஜெட்டில் விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய நகரங்கள் மாநகராட்சியாக அறிவிக்கப்படலாம் என்ற கருத்து உள்ளது . மேலும் வட மாவட்டங்களில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் திமுகவிற்கு நிகரான பலத்துடன் அதிமுக காணப்படுகிறது.அங்கு பாஜகவின் நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட செல்வாக்கால் வெற்றி பெற்றார். இதேபோல் கணிசமான இடங்களில் அதிமுகவும் வென்றது. எனவே அந்த பகுதிகளில் வெற்றிக்கான வியூகங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை நடக்கும் என தெரிகிறது. எனவே திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நாளை நடத்தும் 9 மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது,












Click it and Unblock the Notifications