விஜய் ரசிகர் மன்றத் தலைவர் போல் பேசுகிறார் ஐயூஎம்எல் காதர் மொய்தீன்! திமுக அப்துல்லா விமர்சனம்
சென்னை: விஜய் ரசிகர் மன்றத் தலைவரை போல் காதர் மொய்தீன் பேசுவது இஸ்லாமியர்களை சங்கடத்திற்குள்ளாக்குகிறது என திமுக முன்னாள் எம்பி. புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா விமர்சித்துள்ளார். குர்பானி தடை குறித்து ஐயூஎம்எல் கட்சி ஏன் குரல் கொடுக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருப்பதாவது: விஜய் ரசிகர் மன்றத் தலைவரா காதர் மொய்தீன். திமுகவுடன்தான் இருப்போம் என சொல்லிவிட்டு ஐயூஎம்எல், தவெகவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் 10 நாட்களில் காதர் மொய்தீன் மனம் மாறியது ஏன்?

இது குதிரை பேரம் அல்ல, அடிமாட்டு பேரம். தவெகவுடன் ஐயூஎம்எல் இருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் எப்போதும் திமுக பக்கம்தான். தவெக அமைச்சரவையில் குர்பானி தடைக்கு முஸ்லீம் லீக் ஏன் குரல் கொடுக்கவில்லை?
ஐயூஎம்எல் தவெகவுடன் சென்றதால் முஸ்லீம்களின் ஆதரவு திமுகவுக்கு கிடைக்காது என கூறுவது தவறு. 2001 ஆம் ஆண்டு ஐயூஎம்எல் திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனாலும் முஸ்லீம் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் நாங்கள் வென்றோம்.
காமராஜர், அண்ணா அமைச்சரவைகளிலும் திமுக, அதிமுக அமைச்சரவையிலும் இஸ்லாமியர்கள் இடம் பெற்றிருந்தனர். தொடர்ச்சியாக தமிழகத்தில் இஸ்லாமியர்கள் அதிகாரத்தில்தான் இருக்கிறார்கள். ஆனால் நூற்றாண்டு கனவு என காதர் மொய்தீன் எதை சொல்கிறார்?
அமைச்சரவையில் சேர்ந்துவிட்டீர்கள். அதற்காக எதையாவது சொல்லிவிட்டு போங்கள். ஆனால் திராவிட இயக்கம் செய்யாததைப் போல் சொல்வதை எங்களால் ஏற்க முடியாது. தமிழர்களிலேயே பெரிய மனிதர் என திமுக அவருக்கு தகைசால் தமிழர் விருதை வழங்கியது. ஆனால் அவர் போலி லாட்டரில் உள்ள ஒருவரை பெரிய மனிதர், பெரிய மனசு என்கிறார் இவ்வாறு அப்துல்லா விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications