என்னாது மதுரை மேற்கு வேணுமா? இருங்க மயிலாடுதுறைக்கே வேட்டு வைக்கிறோம்! திமுக- காங்கிரஸ் மல்லுக்கட்டு!
சென்னை: மயிலாடுதுறை தொகுதியை காங்கிரஸுக்கு கொடுக்கக் கூடாது என அந்த தொகுதியின் திமுக நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முறையிட போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எல்லா கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து பேசி வருகின்றன. ஆனால் திமுகவில் காங்கிரஸ் கட்சியுடன் மோதல் போக்கு எழுந்துள்ளது.

தலைமைகள் ஒற்றுமையாக இருந்தாலும் அடுத்த கட்ட நிர்வாகிகளிடையே ஒற்றுமையின்மையே காணப்படுகிறது. ஆட்சியில் பங்கு, 41 சட்டசபை தொகுதிகள், 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் சீட்.. இவற்றை காங்கிரஸ் டிமான்ட்டாக வைக்கிறது.
இந்த கோரிக்கைகளில் ஒன்றை கூட நிறைவேற்ற முடியாது என திமுக திட்டவட்டமாக கூறிவிட்டதாம். ஆனால் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்டோர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள். தினமும் இதனால் திமுக- காங்கிரஸ் இடையே சமூகவலைதளத்தில் வார்த்தை போர் நடந்து வருகிறது.
இது திமுக தலைமைக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மேற்கு தொகுதியின் எம்எல்ஏ கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். மேலும் மாணிக்கம் தாகூர், ஜோதிமணிக்கு சீட் கொடுக்கக் கூடாது என்றும் விமர்சித்திருந்தார்.
இதனால் காங்கிரஸ் கட்சியினர், மதுரை மேற்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என போஸ்டர் அடித்து ஒட்டி கோ.தளபதிக்கு பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் வசம் உள்ள மயிலாடுதுறை தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் விரும்புகிறார்கள்.
அதாவது காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை எம்எல்ஏவான ராஜ்குமாருக்கும் எம்பியான ஆர்.சுதாவுக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. இதனால் மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை, முதல்வரின் மருத்துவ காப்பீடு, உள்ளிட்ட திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை. இதனால் மயிலாடுதுறை தொகுதியில் வரும் தேர்தலில் திமுகவே போட்டியிட வேண்டும் என வலியுறுத்த அந்த தொகுதி திமுக நிர்வாகிகள் விரைவில் முதல்வரை சந்திக்க போகிறார்களாம்.
தமிழ்நாட்டின் முக்கியமான சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான மயிலாடுதுறையில், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பதிலாக திமுகவே போட்டியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதற்காக மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள் விரைவில் கட்சித் தலைமையை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த முடிவு கூட்டணி உறவுகளில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் பலம் கொண்ட தொகுதியாகும். இங்கு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் 2024 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே வென்றனர்.
இது போல் திமுக எதிர்ப்புக்கு காங்கிரஸ் இதுவரை பதிலடி கொடுக்கவில்லை. ஏற்கனவே மாநில அளவில் காங்கிரஸ் அதிக இடங்களையும், ஆட்சியில் பங்கையும் கோரி வரும் நிலையில், உள்ளூர் அளவில் திமுகவின் இத்தகைய நகர்வு கூட்டணியை மேலும் சிக்கலாக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
மயிலாடுதுறை தொகுதி வரலாற்று ரீதியாக திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் மாறி மாறி வெற்றி பெற்ற இடமாக உள்ளது. ஆனால், தற்போதைய சூழலில் திமுகவின் வலுவான அமைப்பு மற்றும் மக்கள் ஆதரவு காரணமாக, இத்தொகுதியை கைப்பற்றுவது எளிதாக இருக்கும் என கட்சியினர் நம்புகின்றனர்.
இந்தக் கோரிக்கை தலைமையால் ஏற்கப்படுமா? அல்லது கூட்டணி நலனுக்காக மறுக்கப்படுமா? என்பது அடுத்த சில வாரங்களில் தெரிய வரும். இதன்மூலம், 2026 தேர்தலுக்கு முன்பாகவே திமுக-காங்கிரஸ் இடையேயான உறவில் புதிய சவால்கள் எழுந்துள்ளன. மக்களின் நலனை முன்னிறுத்தி எடுக்கப்படும் முடிவு எதுவாக இருந்தாலும், அது கூட்டணியின் வெற்றிக்கு முக்கியமானதாக அமையும்.












Click it and Unblock the Notifications