அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் மெகா குழப்பம் நீடித்து வந்த அதிமுக கூட்டணி அடுத்த கியரில் வேகம் எடுத்துள்ளது. ஒரு வழியாக அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக என முக்கிய கட்சிகளுக்கான தொகுதி பகிர்வு நிறைவு செய்யப்பட்டு விட்டது. ஆனால் அதிமுக கூட்டணிக்கு முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக முகாமில் இன்னும் தொகுதி பகிர்வு இழுபறி நீடித்து வருகிறது.

திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளோடு தொகுதி பங்கீட்டை முடிக்காமல், அவசர அவசரமாக காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீட்டை செட்டில் செய்தார் முக. ஸ்டாலின். அதற்கு முன்னதாக தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார்.

congress

தேமுதிக கூட்டணியில் இணைந்த உடனேயே அந்த கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை ஒதுக்கி அதில் எல்.கே. சுதீஷ் வெற்றியும் பெற்று எம்பி ஆகிவிட்டார். தற்போது தேமுதிக திருப்தியடையும் அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கவும் திமுக தலைமை தயாராகவே இருக்கிறது. ஆனால் மத்திய அரசை நிர்வாக ரீதியாகவும் மத்தியில் ஆளும் பாஜகவை கொள்கை ரீதியாகவும் இத்தனை காலம் தங்களோடு தோளோடு தோள் இணைந்து எதிர்த்து வந்த இடதுசாரிகளுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் தொகுதிகளை இறுதி செய்வதில் மிகப்பெரிய இழுபறியை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அனுமதித்தது ஏன் என்பது தான் விடை காண முடியாத வினாவாகி இருக்கிறது.

தவெகவை நினைத்து ஸ்டாலினுக்கு பயமா?...

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியவுடன் இரண்டு முகாம்களிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்ட உடனே இதுநாள் வரை தங்களோடு கூட்டணி அமைத்து இருந்த காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக விஜயுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவலாக பேச்சு எழுந்தது. சோனியா காந்தி திமுகவுடன் கூட்டணியை தொடர்வதற்கு ஆவலாக இருந்தும் பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோர் விஜயுடன் கூட்டணி வைக்கவே விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் விஜயுடன் சில கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல்களை கசிய விட்டன. இந்த நிலையில் தான் காங்கிரஸ் உடனான தொகுதிப் பகிர்வை அவசர அவசரமாக முடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

என்னதான் பாஜக எதிர்ப்பு தங்களின் பிரதான கொள்கை என்றாலும் தமிழகத்தில் புதிதாக மற்றொரு எதிர்முகாம் உருவாகி விடக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருந்தாரா என்பது இங்கே கேட்கப்பட வேண்டிய கேள்வி. அதாவது புதிதாக கட்சி தொடங்கிய விஜய்க்கு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் செல்வாக்கு அதிகம் இருப்பதான ஒரு மாயை அல்லது பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

அது ஓரளவுக்கு உண்மை என்கிற பட்சத்தில் காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைத்தால், தமிழகத்தில் அசைக்க முடியாத மற்றொரு அரசியல் சக்தியாக தவெக உருவெடுத்து விடும் என ஸ்டாலின் கணக்கு போட்டாரோ என்னவோ?... தவெக வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாவதை தடுப்பதற்காக அவசர அவசரமாக காங்கிரசுக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்து கூட்டணிக்குள் தக்கவைத்துக் கொண்டாரா ஸ்டாலின் என்கிற சந்தேகம் தவிர்க்க முடியாதது. அதேபோல் தேமுதிக எந்த பக்கம் சாயும் என இரண்டு முகாம்களும் எதிர்பார்த்து இருந்த நிலையில், கேப்டனின் செல்வாக்கு இன்னும் குறையாமல் இருக்கும் ஊரகப்பகுதி வாக்குகளை பெரும் நோக்கில் தேமுதிகவை அவசர அவசரமாக கூட்டணிக்குள் கொண்டு வந்து ராஜ்யசபா சீட்டையும் ஒதுக்கி கொடுத்துவிட்டார் மு.க. ஸ்டாலின் என்கிற விமர்சனத்தையும் தவிர்க்க முடியவில்லை.

தவெக என்னும் புதிய எதிரி உருவாக்கிவிடக் கூடாது என்கிற நோக்கத்தில் காங்கிரஸையும் தேமுதிகவையும் கூட்டணிக்குள் வளைத்து போட்ட ஸ்டாலின், எத்தனை இடர்களிலும் தங்களோடு தோள் நின்று, தங்கள் ஆட்சிக்கும் கொள்கைக்கும் பக்கபலமாக இருந்த விசிவையும், கம்யூனிஸ்டுகளையும் ஸ்டாலின் கண்டுகொள்ள தவறிவிட்டாரோ என எண்ண தோன்றுகிறது.

ஒருவேளை காங்கிரசை திமுக கன்வின்ஸ் செய்யாமல் விட்டிருந்து, காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி அமைத்திருந்தால், வரும் தேர்தலில் வெல்வது பிரம்மபிரயத்தனமாக போகும் என பயந்து தான் ஸ்டாலின் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டு கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் தங்கள் தொகுதிகளை குறைத்துக் கொள்ள அவர்களோடு பேச்சுவார்த்தை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் என்ற சந்தேகத்தை முன் வைக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

தவெகவை தளிர்க்க விடாமல் செய்வதற்கான ராஜதந்திர முயற்சிகள் அவசியம் என்றாலும், 2026 சட்டமன்ற தேர்தல் தேர்தலிலும் அடுத்து வரப்போகும் அனைத்து தேர்தல்களிலும் தங்கள் கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு தங்களோடு பயணிக்கும் கம்யூனிஸ்டுகளாலும், விடுதலை சிறுத்தைகளாலும் சாத்தியம் தான் என்பதை ஸ்டாலின் மறந்து விட்டாரா? கொடுக்கும் தொகுதிகளை ஒப்புக் கொள்ளச் சொல்லி ப்ளீஸ் திருமா என கேட்கத் தெரிந்த ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் உடனான கூட்டணியை தக்க வைத்துக் கொள்வதற்கு, தகுதியான வேறு முயற்சிகள் அல்லது வழிகள் தெரியவில்லையா எனவும் கள எதார்த்தம் அறிந்தவர்கள் கேள்வியை வீசுகிறார்கள். கூட்டணியை கட்டமைக்கும் விவகாரத்தில் ஸ்டாலின், காங்கிரஸ் மற்றும் தேமுதிக கட்சிகளோடு செய்து கொண்ட சமரசம் சரிதானா என்பதை அவரே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது

- சிறப்பு நிருபர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+