நீட் மரணங்களை மறைக்க கலவரத்தை கிளப்பி இருக்கலாம்.. அதிமுக இன்பதுரைக்கு வந்த திடீர் சந்தேகம்
சென்னை : நீட் தேர்வால் ஏற்படும் தொடர் மரணங்களை மறைக்க கள்ளக்குறிச்சி சம்பவத்தை திமுக திட்டமிட்டே நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.
எப்போதும் ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேலை என்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் கொடுத்தது கூட அனைவரும் இதைப் பற்றியே பேச வேண்டும் மற்றவற்றை மறந்து விட வேண்டும் என்பதற்காகத்தான் என அவர் தெரிவித்துள்ளார்.

சொன்னது என்ன?
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் இன்பதுரை. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இன்பதுரை, "சமீபத்தில் நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில் இதுவரை தமிழகத்தில் 8 மாணவர்கள் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே கையெழுத்தில் நீட் தேவை ஒழிப்போம் என்றார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முறை நீட் தேர்வு நடந்துவிட்டது.

நீட் மரணங்கள்
நீட் தேர்வு தொடர்பான மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. நீட் மரணங்களை திசை திருப்பவும், மறைப்பதற்காகவும் கள்ளக்குறிச்சி கலவரத்தை திட்டமிட்டு திமுக நடத்தி இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. இப்போது அனைவரும் கள்ளக்குறிச்சி விஷயத்தைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் நீட் தேர்வு நடந்து முடிந்துவிட்டது.

அடுத்த நாளே
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீசார் இப்போது ஓடி ஓடி கைது செய்கிறார்கள். தமிழக காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கலவரத்தை அடக்கிவிட்டது என இவர்களே பாராட்டி பேட்டி கொடுக்கிறார்கள். ஆனால் மறுநாளே மாவட்ட ஆட்சியர், எஸ்.பி என அனைவரும் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். இது ஏன்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

திசைதிருப்பும் முயற்சி
மேலும் பேசிய இன்பதுரை, "முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை என்ற அளந்து வருகின்றனர். அவரது முன்னோர்கள் கட்டிய வீட்டை எதற்காக அளவீடு செய்கிறார்கள்? குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் கொடுத்தது எதற்காக, அனைவரும் இதைப் பற்றியே பேச வேண்டும் மற்ற தவறுகளை மறந்து விட வேண்டும் என்பதற்காகத்தான்.

திமுக வேலையே இதுதான்
திமுக அரசு தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. எப்போதுமே ஒரு செய்தியை மறைக்க இன்னொரு செய்தியை கிளப்பி விடுவது தான் திமுகவின் வேலை. நீட் மரணங்களை மறைக்க கள்ளக்குறிச்சி கலவரம், அதை மறைக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை என திமுக அரசு செயல்படுகிறது" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications