“அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகன் தலையீடு” செங்கோட்டையன் சொன்னதை குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதி
சென்னை: "அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிமுகவும் குடும்ப அரசியலுக்கு மாறிவிட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம்" என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 10 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் வருகை தரும் நிகழ்ச்சியானது கீரனூர் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

SIR தேவையில்லை என்று நாங்கள் கூறவில்லை, அவசரப்பட்டு எஸ்ஐஆர் எடுக்கக் கூடாது. தேர்தல் முடிந்த பிறகு நிதானமாக யாருடைய வாக்கும் விடுபடாமல் எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறுகிறோம். எஸ்ஐஆர் தேவை என்று கூறி திமுகவிற்கு எங்கே அதிகமாக வாக்குகள் உள்ளது என்பதை கண்டறிந்து அங்கு உள்ள வாக்காளர்களை நீக்கிவிட்டு நாம் வெற்றி பெறலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.
SIR தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் எங்களுடைய வாதங்களை நாங்கள் எடுத்துக் கூறுவோம். அவசரப்பட்டு எஸ்ஐஆர் எடுக்கக் கூடாது என்று நாங்கள் வாதிடுவோம். பொதுமக்களிடம் விண்ணப்பங்கள் கொடுத்த பிறகு பூர்த்தி செய்து அதை மீண்டும் அவர்கள் வழங்காவிட்டால் அவர்களுடைய வாக்காளர் உரிமையை எஸ்ஐஆர் பறித்து விடும். திமுகவிற்கு வாக்காளர் பட்டியலில் எந்த போலி வாக்காளர்களையும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகத் தான் நாங்கள் இதை கூறுகிறோம். பீகாரில் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது அவர்களுடைய உட்கட்சி விவகாரம். இருப்பினும் அனைத்து தரப்பும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறியதால் அவர் நீக்கப்பட்டுள்ளார். பாஜகவை பொறுத்தவரை பல டீம்கள் வைத்துள்ளனர். அதில் செங்கோட்டையன் தலைமையிலான டீமும் ஒன்று. திண்டுக்கல் சீனிவாசனுக்கு திராணியை பற்றி பேச தகுதியில்லை, ஆப்பிளை கையில் வைத்துக் கொண்டு மாம்பழம் என்று கூறுவார், இவர் எல்லாம் திராணியை குறித்து பேசலாமா?
கோடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. அது குறித்து விவரமாக பேச முடியாது. திமுக மீது எத்தனை குற்றச்சாட்டுகளை யார் மீது வைத்தாலும் மக்கள் எங்களுக்கு தான் வாக்களிப்பார்கள். கே.என்.நேருவைப் பொறுத்தவரை அவரது தொகுதியில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அது பாஜகவுக்கும் தெரியும், அதிமுகவுக்கும் தெரியும்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மகனின் தலையீடு அதிகமாக உள்ளதால் அதிமுகவும் குடும்ப அரசியலுக்கு மாறிவிட்டது என்று செங்கோட்டையன் கூறி இருக்கலாம்" என்றார் அமைச்சர் ரகுபதி.
முன்னதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், " இன்றைக்கு வருகிற பிரச்சினைகளை பார்க்கும் போது திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. இன்று இவருடைய (எடப்பாடி) அரசியலிலும் மகன், மாப்பிள்ளை, மைத்துனர் போன்றவர்களின் தலையீடுகள் இருக்கிறது என்பது நாடறிந்த உண்மை" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications