சென்னை, கோவையில் 40, 50 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படுமா? சட்டசபையில் கு.பிச்சாண்டி கேள்வி
சென்னை: டெல்லி, மும்பை போல் 40, 50 அடுக்குமாடி வீடுகளை தமிழக வீட்டு வசதி வாரியமும் சென்னை, கோவையில் வீடுகளை கட்டுமா என துணை சபாநாயகரும் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து சட்டசபையில் துணை சபாநாயகரும் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி பேசுகையில், டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் இடவசதி இல்லாத காரணத்தால் 40, 50 மாடிகளாக அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை கட்டித் தருகிறது.

அதே போல் தமிழகத்தில் தனியார் கட்டட நிறுவனங்கள் 50,60 மாடி கட்டடங்களை கட்டுகிறார்கள். சென்னை, கோவை போன்ற நகரங்களில் எல்லாம் இட நெருக்கடி இருக்கும் காரணத்தால் 40, 50 மாடிகள் கட்டி விற்பனை செய்ய அரசு முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.
3டி தொழில்நுட்பம்
புதிய 3டி தொழில்நுட்பத்தின் மூலம் வேலைகள் வேகமாக நடக்கின்றன. அந்த தொழில்நுட்பத்தை கொண்டு வர முடியுமா, precosting மூலம் வீடு கட்டும் பணிகளை விரைவுப்படுத்த வாய்ப்பு அமையுமா என்பதை அறிய விரும்புகிறேன்.
வீடுகள் விற்காத இடம்
அது போல் வீடுகள் விற்காத இடங்களில் இருக்கும் வீடுகளை இடித்துவிட்டு இப்படிப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி அதை மக்களுக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? வீட்டு வசதி வாரியம் வீடுகளை கட்டினால்தான் வெளிமார்க்கெட்டில் வீடுகள் விலை குறைவாக இருக்கும். இல்லாவிட்டால் வீடுகளின் விலை உயர்ந்துவிடும்.
வீடுகளை கட்டித் தர நடவடிக்கை
எனவே இதை உணர்ந்து நமது அரசு ஏழை எளிய மக்களுக்காக வீடுகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்குமா என அறிய விரும்புகிறேன். இதற்கு வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பதில் அளிக்கையில், வீட்டு வசதி வாரியத்திற்கு இருக்கிற இடத்தில் எல்லாம் முடிந்த வரை மாடி கட்டும் எண்ணிக்கை விதிகளை (FSI) எவ்வளவு கூடுதலாக பயன்படுத்த முடியுமோ அவ்வளவையும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எத்தனை மாடிகள்
சாலையின் அளவையும் பொருத்து எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதை முடிவு செய்யலாம். ஒரு வேளை விமான நிலையம் இருக்கும் இடம் என்றால் airport authority எத்தனை மாடிகளுக்கு அனுமதிக்கிறார்கள் என்பன உள்ளிட்ட பலவிதமான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டே வீடுகள் கட்டப்படுகின்றன.
பிச்சாண்டி
பிச்சாண்டி சொன்ன அனைத்து கருத்துகளையும் மனதில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முத்துசாமி பதிலளித்தார்.
தமிழக பட்ஜெட்
தமிழகத்தில் பட்ஜெட்டானது கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அது முதல் தற்போது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன. சனி, ஞாயிறு, திங்கள்கிழமை ரம்ஜான் என 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று கூடியது. அப்போதுதான் வீட்டு வசதி துறை குறித்த கேள்விகளை உறுப்பினர்கள் எழுப்பினர். அதற்கு அமைச்சரும் பதில் அளித்தார்.
வீட்டு வசதி வாரியம்
வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான கட்டடங்கள் விற்பனையாகாமல் இருக்கும் நிலையில் அவற்றை வாடகைக்கு விடவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கட்டடங்களின் விலையை குறைத்து விற்பனை செய்யவும் முடிவு எடுத்துள்ளதாக முன்பு சொல்லப்பட்டது. ஆனால் இது நடைமுறையில் வந்ததா என தெரியவில்லை. தமிழ்நாடு வீட்டு வசதி துறை சார்பில் ஆங்காங்கே வீடுகள் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இவை ஏரியாவுக்கு தகுந்தாற் போல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்காக வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றை பணம் செலுத்தி பூர்த்தி செய்து அனுப்பினால் குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.












Click it and Unblock the Notifications