"முதல்வருக்கு ரொம்ப பிடிக்கும்.." ஐஸ் வைத்த திமுக எம்.எல்.ஏ.. அசராத பொன்முடி!
சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் ராஜபாளையம் தொகுதி தான் முதலமைச்சருக்கு ரொம்ப பிடித்த தொகுதி என திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் சட்டசபையில் ஐஸ் வைத்தார்.
Recommended Video
இதனிடையே ராஜபாளையம் தொகுதி மட்டும் அல்ல தமிழகத்தின் 234 தொகுதிகளும் முதலமைச்சருக்கு பிடித்த தொகுதி தான் என்றும் அவர் பெயரைச் சொல்லித் தான் நாம் வெற்றி பெற்று வந்திருக்கிறோம் எனவும் அமைச்சர் பொன்முடி பதில் கொடுத்தார்.
இதனால் சட்டசபை தொடங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிரிப்பலை எழுந்தது.

தமிழக சட்டசபை
தமிழக சட்டசபை 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று கூடியது. இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது பேசிய ராஜபாளையம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், தமிழகத்தில் 234 தொகுதிகள் இருந்தாலும் ராஜபாளையம் தொகுதி தான் முதலமைச்சருக்கு ரொம்ப பிடித்த தொகுதி என காலையிலேயே பெரிய ஐஸாக வைத்தார்.

ராஜபாளையம் தொகுதி
மேலும், ராஜபாளையம் தொகுதியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ராஜபாளையம் தொகுதி மட்டும் தான் முதலமைச்சருக்குரொம்ப பிடித்த தொகுதி என்பதை ஏற்க மாட்டேன் என்றும் அவருக்கு 234 தொகுதிகளும் பிடித்த தொகுதிகள் தான் எனவும் முதலமைச்சர் பெயரை கூறி தான் நாமெல்லாம் எல்லா தொகுதிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறோம் எனவும் அசராமல் பதிலளித்தார்.

அரசு முன்னுரிமை
இதனால் சட்டசபை தொடங்கிய சிறிது நேரத்திலேயே உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மேலும், கல்லூரி இல்லாத பகுதிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து புதிய கல்லூரி நிறுவி வருவதாகவும் குறிப்பாக மகளிர் கல்வி கற்க வேண்டும் என்பதில் தமிழக அரசு தீவிர அக்கறை காட்டி வருவதாகவும் அதன் பயனாக தான் உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்ததாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தவறில்லை
எல்லா எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதிக்கு புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கேட்பது நியாயமான கோரிக்கை தான் என்றும் அதில் தவறேதும் இல்லை எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். அரசை பொறுத்தவரை எந்த தொகுதிக்கும் கல்லூரி கொடுக்கக் கூடாது என்பது நோக்கமல்ல என்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 2 அமைச்சர்கள் இது தொடர்பாக பலத்த பரிந்துரை செய்திருப்பதால் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறினார்.












Click it and Unblock the Notifications