"மன்னிப்பு கேட்பீர்களா?" நயன்தாராவை இழிவுபடுத்திய விபி துரைசாமி.. சீனுக்குள் வந்த டிஆர்பி ராஜா!
சென்னை: நடிகை நயன்தாரா பற்றி பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி இழிவாக பேசிய வீடியோவை திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா பகிர்ந்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த பேச்சாளர் சைதை சாதிக் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில் பாஜகவைச் சேர்ந்த திரைப்பட நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து மிகவும் கீழ்த்தரமாக பேசி இருந்தார்.
இதுகுறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஆண்கள் பெண்களை தவறாக வசைபாடும்போது, அது அந்த ஆண்களின் வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது. இந்த ஆண்கள் பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள். அத்தகைய ஆண்கள், தாங்கள் கருணாநிதியைப் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். இதுதான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான புதிய திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பினார்.

கனிமொழி மன்னிப்பு
இதற்கு திமுக எம்.பி.யும், துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி, ட்விட்டரில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டார். கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒரு பெண்ணாகவும், ஒரு மனுஷியாகவும் திமுக நிர்வாகி சைதை சாதிக் பேசியதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டார். திமுகவின் முக்கிய பதவியில் இருக்கும் கனிமொழி, பாஜகவின் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்டது பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதேபோல் அரசியல் மேடைகளில் பேசுவோர் எந்த அளவிற்கு கண்ணியத்துடன் பேச வேண்டும் என்பதையும் புரிய வைத்தது.

விபி துரைசாமி பேச்சு
இந்த நிலையில் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தின் போது பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி நடிகை நயன்தாரா குறித்து இழிவாக பேசிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், கோவை குண்டுவெடிப்பு குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தாமல், நயன்தாரா விஷயத்தை விவாதித்து வருகிறார்கள். நயன்தாராவுக்கு 4 மாதத்தில் 2 குழந்தை பிறக்கலாமா? என்று கேட்டு ஒரு குழுவை அமைத்துள்ளார்கள். நயன்தாராவுக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தால் நமக்கென்ன?

நயன்தாராவை பற்றி இழிவு பேச்சு
நயன்தாராவின் புருஷன்காரன் மாபெரும் தியாகி. அவரே அமைதியாக இருக்கிறார். இங்கு வாடகை தாய்கள் கிடைப்பார்கள் என்று நுங்கம்பாக்கம் பகுதிகளில் போர்டுகள் தொங்குகின்றன. தமிழ்நாடு எந்த அளவுக்கு திராவிட மாடலில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பாருங்கள் என்று பேசினார். இதுமட்டுமல்லாமல் நயன்தாரா என்று குறிப்பிட்டு வந்தவர், திடீரென ஒன்பதுதாரா என்று இழிவாக பேசியுள்ளார்.

டிஆர்பி ராஜா ட்வீட்
இதுகுறித்து திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவில் மிகமுக்கியப் பதவியில் இருக்கும் விபி துரைசாமி பெண்களை பற்றி இழிவாக பேசியுள்ளார். திமுக பேச்சாளரை கண்டித்து பேசி பொங்கி எழுந்த அனைவரும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் பாஜகவின் முக்கிய நிர்வாகி பேச்சிற்கு பாஜகவினர் மன்னிப்பு கேட்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications