அன்னபூர்ணா விவகாரம்! கருணாநிதி முன்பு அஜித் பேசியதை நினைவுகூர்ந்த திமுக எம்பி! பாஜக மீதும் பாய்ச்சல்
சென்னை: கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட விவகாரம் இப்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கிடையே 2010இல் நடந்த சினிமா விழா ஒன்றில் அஜித் பேசிய சம்பவத்தை நினைவு கூர்ந்து இந்தச் சம்பவத்திற்கு திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இதில் பல்வேறு தொழில் முனைவோர் கலந்து கொண்டு ஜிஎஸ்டி குறித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

சர்ச்சை: அப்போது கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் பேசிய சில விஷயங்கள் இணையத்தில் டிரெண்டானது. ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒவ்வொரு ஜிஎஸ்டி இருப்பதால் சிரமமாக இருப்பதாகத் தெரிவித்த சீனிவாசன், அதை ஒரே போல மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். கொங்கு ஸ்டைலில் அவர் பேசியது இணையத்தில் டிரெண்டானது.
இதையடுத்து நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து சீனிவாசன் மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவை பாஜகவினர் பகிர்ந்ததே இப்போது சர்ச்சைக்குக் காரணமாகும். தொழில்முனைவோர் ஒருவரை மிரட்டி பாஜக மன்னிப்பு கேட்க வைத்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவாகரத்தில் ராகுல் காந்தியும் பாஜகவைக் கடுமையாகச் சாடி பதிவிட்டிருந்தார்.
அஜித் பேச்சு: இதற்கிடையே இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லாவும் தனது கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட அஜித், அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் சில பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அஜித் கூறுகையில், "ஒவ்வொரு முறையும் சென்சிடிவ்வான விஷயம் நடக்கும் போது பொறுப்பில் இருக்கும் சிலர் கட்டாயப்படுத்தி நிகழ்ச்சிகளுக்கு வரச் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே நாங்கள் வர வேண்டி இருக்கிறது. எங்களுக்கு அரசியல் வேண்டாம். சினிமாவையும் அரசியலையும் ஒன்றாகக் கலக்க வேண்டாம்" என்று கூறியிருந்தார்.
கைதட்டிய ரஜினி: அஜித்தின் இந்தப் பேச்சைக் கேட்டு அங்கிருந்த நடிகர் ரஜினிகாந்த்தும் எழுந்து நின்று கைதட்டினார். இந்தப் பேச்சு அப்போது மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கிடையே அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அப்துல்லா விமர்சித்துள்ளார்.
எம்எம் அப்துல்லா: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "நடிகர் அஜித் ஒருமுறை தலைவர் கலைஞர் முன்பு எழுந்து ஒரு குற்றச்சாட்டை வைத்தார். அப்போது பலரும் அஜித் அவர்களின் வீரம் அது என்ற போது " கலைஞர் எனும் அரசர் தன் குடிமக்கள் யாரும் தைரியமாக தன் முன் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்" என மக்களுக்கு ஏற்படுத்திய நம்பிக்கையது என நான் சொன்னேன். அன்னபூர்ணா உரிமையாளர் கூனி குறுகி மன்னிப்பு கேட்கும் வீடியோ பார்க்கும் போது அதுதான் நினைவில் வந்தது!!" என்று விமர்சித்துள்ளார்.
கடந்த 2010இல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து எம்.எம்.அப்துல்லாவின் இந்த விமர்சனத்திற்கு நெட்டிசன்கள் ஆதரவாகும் எதிர்ப்பாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications