கழற்றிவிடப்படும் புள்ளிகள்.. நாளை வெளியாகிறது திமுக வேட்பாளர் பட்டியல்.. ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
சென்னை: லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மூத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது.
2024 மக்களவைத் தேர்தல்: திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு விவரம்.

திமுக - 21
காங்கிரஸ் - 9 + புதுச்சேரி
விசிக - 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ - 2
சிபிஎம் - 2
மதிமுக -1
இயூமுலீ - 1 (ராமநாதபுரம்)
கொமதேக - 1 (நாமக்கல்)
கடந்த வாரம் காங்கிரஸ் உடன் திமுக உடன்படிக்கையை மேற்கொண்டது. அதற்கு முன் மக்களவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இப்போதுதான் கையெழுத்து ஆனது.
அதேபோல் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் திண்டுக்கல் தொகுதியை திமுக சிபிஎம்க்கு கொடுத்தது ஏன் என்று இங்கே பார்க்கலாம்.
மதுரையில் ஏற்கனவே சிபிஎம்தான் உள்ளது. கோவையில் சிபிஎம் இருந்த நிலையில் அவர்களுக்கு திண்டுக்கல் தரப்பட்டு உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி நாளை காலை அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
வேட்பாளர் லிஸ்ட்: இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மூத்தவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அனைவரையும் உள்ளடக்கியதாக திமுகவின் வேட்பாளர் பட்டியல் இருக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இருக்கும் எம்பிகளில் சிலரின் வாய்ப்புகள் பறிக்கப்படலாம் என்கிறார்கள். சரியாக பணி செய்யாத, மக்கள் மத்தியில் அபிப்ராயம் இழந்த சிலருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள்.
லோக்சபா தேர்தலில் இளைஞரணி : இந்த நிலையில்தான் இந்த லோக்சபா தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளை களமிறக்க உதயநிதி முடிவு செய்துள்ளாராம். 40 தொகுதிகளில் திமுக எப்படியும் 25 தொகுதிகளில் போட்டியிடும். அதில் 6-8 தொகுதிகளில் இளைஞரணி வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இருக்கிறாராம்.
அதாவது 25 இடங்களில் 12- 13 இடங்களை ஏற்கனவே எம்பியாக இருக்கும் சீனியர்களுக்கு கொடுக்கலாம். அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கலாம். ஆனால் 6-8 இடங்களை எப்படியாவது புதியவர்கள்தான் பெற வேண்டும். அதாவது இளைஞர்கள்தான் பெற வேண்டும் என்ற திட்டத்தில் உதயநிதி இருக்கிறாராம். குறைந்தது 6 பேர் இளைஞரணி பிரிவில் இருந்து வர வேண்டும் என்று உதயநிதி தீவிரமாக முயற்சிகளை செய்து வருகிறாராம்; இதற்காக வாரிசுகள் இல்லாத, 6 புது முகங்களை தேர்வு செய்துவிட்டார் என்றும் தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications