வடசென்னைக்கு குட் நியூஸ்! பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை.. டெல்லியில் திமுக எம்பியின் முக்கிய மூவ்!
புதிய மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக அமைய உள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் இதனால் பலனடைவார்கள்.
சென்னை: பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மருத்துவமனையை நவீன மருத்துவமனையாக விரைந்து கட்டி முடித்திட அமைச்சர் அஸ்வினி வைஷ்னவை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
இந்தியன் ரயில்வே தங்களது ஊழியர்களுக்காக பெரம்பூரில் ரயில்வே மருத்துவமனையை ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கியது. இந்த மருத்துவமனையில் தற்போது 500 படுக்கை வசதிகள் உள்ளன. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையானது ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் குறைந்த அளவில் சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப இம்மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்து வந்தனர்.
அதேபோல இந்த மருத்துவமனையை விரிவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து இதே பகுதியில் ரூ.190 கோடி செலவில் ரயில்வே மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை உருவாக்க கடந்த 2006-07ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதற்கான தொகைகள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டன. இதன் காரணமாக இதன் கட்டுமான பணிகளும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

கட்டி முடிக்கப்பட்டால்
இது கட்டி முடிக்கப்பட்டால் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மருத்துவமனை மொத்தமாக 576,000 சதுர அடி பரப்பளவில் 8 மாடிகளுடன் அமையும். இதில் 600 படுக்கை வசதிகளும், 45 மருத்துவ ஆலோசனை அறைகள் மற்றும் 14 அறுவை அரங்கங்கள் ஆகியவையும் இருக்கும். மேலும், இருதயவியல், எலும்பியல், மார்பு அல்லது நுரையீரல் தொடர்பான நோய்களுக்கும் தனி பிரிவு உருவாக்கப்பட்டு சிகிச்சையளிக்க முடியும். ஆனால் 2014ம் ஆண்டு தொடங்கிய இந்த கட்டுமானப்பணிகள் தற்போது வரை முடியவடையவில்லை. எனவே இதனை விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ரயில்வே பட்ஜெட்
இந்நிலையில் கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரயில்வே துறைக்கு முன்னெப்போதையும் விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதாவது ரூ.2.40 லட்சம் கோடி இத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 9 மடங்கு அதிகமான நிதியாகும். எனவே இந்த முறை ரயில்வேதுறையில் நிறைய மாற்றங்கள் வர உள்ளன. சூழல் இப்படி இருக்க இந்த தருணத்திலாவது பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி, இதனை சீக்கிரமாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்திருக்கிறது.

வலியுறுத்தல்
இக்கோரிக்கையை திமுக மாநிலங்களவை உறுப்பினர் கிரிராஜன் மத்திய அரசிடம் முன்வைத்துள்ளார். நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவின் அலுவலகத்தில் அவரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேற்று (பிப்.02) நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து சென்னை பெரம்பூர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 2014ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் முடிவுறாமல் உள்ள ரயில்வே மருத்துவமனையை விரைந்து கட்டி முடித்து முழு வீச்சில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளுடன் இயங்கிட தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தினேன்" என்று கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு
மேலும், "பட்ஜெட்டில் இதற்காகஅதிக நிதியினை ஒதுக்கிடவும் கேட்டுக் கொண்டேன். அமைச்சரும் இந்த நிதியாண்டில் மேற்படி பணியை முடித்திட அதிக நிதி ஒதுக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உத்தரவிட்டார்" என்று கூறியுள்ளார். இந்த சந்திப்பு வடசென்னை மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications