Kanimozhi on Parasakthi: பராசக்தி படம் எப்படியிருக்கு? கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
சென்னை: பராசக்தி படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து திமுக எம்பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அந்த படக்குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்தது குறித்தும் அவர் பேசியுள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். சமீபத்தில் வெளியான 'பராசக்தி' (2026) திரைப்படம் மற்றும் அதன் குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்துப் பேசிய அவர், தணிக்கை வாரியம் ஆளுங்கட்சியின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த அவர், "தேர்தல் வரும்போது மட்டும் பொங்கல் பண்டிகையும், தமிழர்களும் நினைவுக்கு வருபவர்களைப் பற்றிப் பேசிப் பயனில்லை. தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க நினைப்பவர்களைத் தமிழ் மக்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை," எனக் கூறினார்.
"1952-ல் கருணாநிதி வசனம் எழுதிய 'பராசக்தி' திரைப்படமே சென்சார் காரணமாகப் பல பிரச்சினைகளைச் சந்தித்தது. தற்போது வெளியாகியுள்ள 'பராசக்தி' (2026) திரைப்படமும் தணிக்கை வாரியத்தால் பல வெட்டுக்களைச் சந்தித்துள்ளது," என்று அவர் தெரிவித்தார்.
தணிக்கை வாரியம், அமலாக்கத்துறை (ED), சி.பி.ஐ. போன்ற மத்திய அமைப்புகள் மக்களுக்கு எதிராகவும் ஆளுங்கட்சியின் அரசியல் ஆயுதங்களாகவும் செயல்படுவதாக கனிமொழி தெரிவித்தார். இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளதையும் அவர் நினைவுபடுத்தினார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம், 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தணிக்கை வாரியம் 25 இடங்களில் வெட்டுக்களைப் பரிந்துரைத்தது. குறிப்பாக, இந்தி திணிப்பு தொடர்பான வசனங்கள், 'தீ பரவட்டும்' போன்ற முக்கிய வாசகங்களை மாற்ற உத்தரவிட்டது.
இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்ல பொங்கல் விழாவில் படக் குழுவினர் (சிவகார்த்திகேயன், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்டோர்) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியது.
நடிகர் சிவகார்த்திகேயன், டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், மக்களிடையே நேர்மறை எண்ணங்களைப் பரப்புவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். 'பராசக்தி' படம் குறித்த சர்ச்சைகள் மத்தியில் இச்சந்திப்பு கவனத்தைப் பெற்றது.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படம் வரலாற்று உண்மைகளைத் திரித்து, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களை அவமதிப்பதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதனால், படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அக்குழு கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications