மோடி தொடங்கி வைத்தாரே.. தாம்பரம் - செங்கோட்டை ரயில்! அதிராம்பட்டினத்தில் நிறுத்தி செல்ல எம்பி மனு
சென்னை: பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை இடையிலான ரயிலை தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என ரயில்வே பொது மேலாளரை சந்தித்து திமுக எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கோரிக்கை வைத்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வந்த பிரதமர் நரேந்திர மோடி, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தாம்பரம் - செங்கோட்டை அதிவேக விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். ஆனால், அந்த ரயில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நிற்காதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஜூன் மாதம் முதல் ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் வாரம் மூன்று நாட்கள் இயக்கப்படும் இந்த ரயில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகர், நெல்லை, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படுகின்றன.
இதில் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தைவிட குறைவான கிரேட் கொண்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் இந்த ரயில் தங்கள் பகுதியில் நிற்காமல் செல்வது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பி வந்தனர். 45 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட அதிராம்பட்டினத்தில் ரயிலை நிறுத்தி செல்ல வேண்டும் என நகராட்சித் தலைவர் தெற்கு ரயில்வே தலைமை மேலாளருக்கு ஏற்கனவே கடிதம் எழுதி இருந்தார்.
இருப்பினும் ரயில் நிற்காமலேயே சென்று கொண்டு இருக்கிறது. இதனால் சொந்த ஊரில் ரயில் நிலையம் இருந்து பட்டுக்கோட்டை அல்லது முத்துப்பேட்டைக்கு பல கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து சென்று ரயிலில் ஏற வேண்டிய நிலை இருந்தது.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பில் மதிப்பிற்குரிய தஞ்சாவூர் திமுக எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் அதிராம்பட்டினம் இரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் அப்துல் ரஜாக், தொழில் அதிபர் எம்.எஸ்.சைபுதீன் மற்றும் அ.அஹமது இப்ராஹிம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கை சென்னை தென்னக ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அவர்கள் அளித்த கோரிக்கை மனுவில், "தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு இரயில் (20683/20684) அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். திருச்சி சென்னை திருச்சி சோழன் பகல் நேர அதிவிரைவு இரயிலுக்கு இணைப்பு இரயிலாக காரைக்குடியில் இருந்து மயிலாடுதுறைக்கு அதிராம்பட்டினம் வழியாக இரயிலை இயக்க வேண்டும்.
சென்னையில் இருந்து மயிலாடுதுறை திருவாரூர் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் காரைக்குடி வழியாக மதுரைக்கு தினசரி இரவு நேர இரயிலை இயக்க வேண்டும். அதிராம்பட்டினம் இரயில் நடைமேடை நீளம் குறைவாக இருப்பதால் விரைவு இரயில்களின் இரயில் பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது இதனால் பயணிகள் ஏற இறங்க மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும்." என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அவர்களின் கோரிக்கைகளை புது டெல்லி ரயில்வே வாரியத்தின் தலைவரிடம் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி செல்ல பரிந்துரை செய்வதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications