உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு தீர்ப்பு.. முதல்வருடன் வில்சன் அவசர ஆலோசனை!
சென்னை: உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலினை திமுக எம்பி வில்சன் சந்தித்துள்ளார்.
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு
உயர்சாதி ஏழைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் மூன்று நீதிபதிகள் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ளனர்.இந்த நிலையில் தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி வில்சன் கூறுகையில், 10 சதவிகித இட ஒதுக்கீடு மற்ற வகுப்பினருக்கு கிடையாது என்பது சமத்துவத்திற்கு எதிரானது என்ற வாதத்தை முன் வைத்தோம் என்று தெரிவித்தார்.

ஸ்டாலின் - வில்சன் சந்திப்பு
இந்த நிலையில் திமுக எம்பி பி.வில்சன் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்துள்ளார். 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பி-யுமான வில்சன் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு ஒரு பின்னடைவு என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி முடிவுக் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அவசர ஆலோசனை
தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பி-யுமான வில்சன் ஆலோசனையில் ஈடுபட்டதால், விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications