விஜய் கட்சிக்கு தாவிய திமுக ஊராட்சி மன்றத் தலைவர்! கொலை மிரட்டல் வருவதாக புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவிலிருந்து விலகி ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் நடத்த திட்டமிட்டு அதற்கான வேலைகளை மிக வேகமாகச் செய்து வருகிறது. இதற்காகக் கால்கோள் விழா கடந்த 4 ஆம் தேதி அதிகாலை நடைபெற்றது. இது தொடர்பாக விஜய் அன்றே தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

dmk tvk

அதில், "நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத்திருவிழா" என்று கூறியிருந்தார்.

தவெக மாநாட்டுக்குத் தேசிய அளவில் சில தலைவர்களும், தமிழக அளவில் சில முக்கிய கட்சியின் தலைவர்களும் அழைக்கப்படலாம் என ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. சீமான் அழைக்கப்படுவார் என்று முதலில் ஒரு பேச்சு பரவியது. அவர், 'கட்சி தொடங்கும்போது அவர்தான் இருக்கவேண்டும். அவர்தான் பேச வேண்டும். அவர் கொள்கை அறிவித்து தேர்தல் களத்திற்கு வந்த பிறகு மாற்றுக் கட்சித் தலைவர்களை அழைக்கலாம். அதுதான் சரி' என்று பேசி இருந்தார்.

இந்நிலையில் திமுகவிலிருந்து சிலர் தவெக பக்கம் தாவி வருவதாகத் தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில்தான் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் விஜய் கட்சியில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் அவர்?

கடந்த 2021 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் முதல்நிலை உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தலைவர் பதவிக்கு என்.வீரா என்ற வீராசாமி போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் விஜயகாந்த்தின் தேமுதிகவிலிருந்து வந்த நிலையில், அதிலிருந்து விலகி ஆளும் கட்சியான திமுகவில் இணைந்தார். அதன்பின்னர் வீராசாமியின் உள்ளாட்சி மன்ற செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று புகார்கள் எழுந்தன.

அதனை விசாரிக்க ஒரு குழுவை மாவட்ட ஆட்சியர் நியமித்து உத்தரவிட்டார். அக்குழு நடத்திய விசாரணைக்குப் பின்னர் அறிக்கை வழங்கப்பட்டதன் அடிப்படையில், தலைவர் வீராசாமி மற்றும் துணைத்தலைவர் லோகேஸ்வரி ஆகிய இருவரும் நிர்வாக ரீதியாகக் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் தற்காலிகமாகப் பறிக்கப்பட்டது.

ஊராட்சி பணப்பரிவர்த்தனை சம்பந்தமான அதிகாரம் பிடிஒ கட்டுப்பாட்டிற்கு அளிக்கப்பட்டது. இதனால் கடும் மன அதிருப்தியிலிருந்து வந்த வீராசாமி, திடீரென்று திமுகவிலிருந்து விலகி விஜய்யின் தவெகவில் இணைந்துள்ளார். "நான் தேமுதிகவிலிருந்தாலும் சுயேச்சை வேட்பாளராகத்தான் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். வெற்றிக்குப் பின்னர்தான் திமுகவில் இணைந்தேன். ஆளும் கட்சியிலிருந்தால் உள்ளாட்சி பணிகளுக்கான வேலைகளைச் சிறப்பாக செய்ய முடியும் என்று நம்பினேன்.

dmk tvk

ஆனால், அது நடக்கவில்லை. அதனால் மன அதிருப்தி ஏற்பட்டது. ஆகவே விஜய் தொடங்கியுள்ள தவெகவில் இணைந்தேன். விஜயகாந்த்திற்குப் பின் விஜய் கட்சி ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்போது விஜய் கட்சி தொடங்கிவிட்டதால் அங்கே சென்றுவிட்டேன்.

அதனால் என் மீது காழ்வு கொண்டுள்ள திமுகவினர் எனது பதவியைப் பறிப்பதற்காகப் பல முயற்சிகளைச் செய்து வருகின்றனர். என்னைப் போலவே பலரும் விஜய் பக்கம் போகக்கூடும் என்பதால் எங்கள் ஊராட்சியில் உள்ள வார்டு கவுன்சிலர்களை ஒன்று திரட்டி என் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். மேலும் ஊழல் புகார் குற்றச்சாட்டைப் பொய்யாக முன்வைத்து தாசில்தார் மூலம் விசாரணை நடத்த வைத்துள்ளனர்.

வார்டு நம்பர்களையும் துணைத் தலைவரையும் திமுகவினர் தன் பக்கம் இழுத்துவிட்டனர். என்னால் அவர்களை எதிர்த்துப் போராடுவது கஷ்டம். எனவே நான் இனிமே திமுகவில் இருக்கவேண்டாம் என வெளியேறிவிட்டேன். அப்படி இருந்தும் என்னை அவர்கள் விடுவதாக இல்லை. கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். என்னை முடக்கச் சதி வேலைகள் செய்கிறார்கள்.

நான் ஊழல் செய்தேனா? இல்லையா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும். நீதிபதி தண்டனை அளித்தால் அதை அப்படியே ஏற்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், ஆட்சியை வைத்து என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்க அழுத்தம் கொடுக்கிறார்கள். அதற்குச் சட்டத்தில் இடமே இல்லை. ஊராட்சி ஆவணங்கள் அனைத்தும் முறையாக உள்ளன. ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும். அப்படி இருக்கும்போது கவுன்சிலர்களை கையில் போட்டுக் கொண்டு என்னை மிரட்டுவது எப்படி நியாயம்?

2021 முதல் 2024 வரையான அனைத்து வரவு செலவு கணக்குகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் ஒருமுறைகேடும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சியில் சேர்ந்தேன் என்ற ஒரே காரணத்தால் என்னைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள். என்னிடம் லஞ்சம் கேட்கிறார்கள். பணம் கொடுத்தால் விசாரணையை நிறுத்திவிடுவோம் என்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

கூடவே கவுன்சிலர் அருண் என்பவர் எனக்கு நேரடியாகக் கொலை மிரட்டல் விடுகிறார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கிறது. நான் ஒரு சாதாரண ஊராட்சி மன்றத் தலைவர். எனக்கே இவ்வளவு நெருக்கடி தருகிறார்கள். இது என்ன ஜனநாயகம்? இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நானே வழக்குத் தொடர்ந்துள்ளேன். அங்கே எனக்கான நீதி கிடைக்கும்" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+