3 நாளா எங்கே இருந்தீங்க விஜய்? தலைமை செயலாளராலேயே CM-ஐ தொடர்பு கொள்ள முடியலையாமே? திமுக பரந்தாமன்
சென்னை: தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 17 கொலைகள் நடந்துள்ளன. தமிழக டிஜிபியும் தலைமைச் செயலாளரும் விஜய்யை தொடர்பு கொள்ள முடியவில்லையாமே என திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன், முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இப்போது வரைக்கும் 17 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 3 நாட்களாக பேப்பர் படிச்சீங்களா சிஎம் சார்? சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வாலும் தலைமைச் செயலாளர் சாய்குமாரும் உங்களை (விஜய்) தொடர்பு முடியலையாமே?

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் இந்த பண்டிகை நாளில் பட்டாசு சப்தத்தை விட பட்டாக் கத்தி சப்தம்தான் அதிகம் கேட்டது. தீபாவளிப் பண்டிகை அன்று மட்டும் 17 கொலைகள் நடந்துள்ளன.
காவல் துறை விழிப்போடு இருக்க வேண்டும்
"பண்டிகை என்றால் அப்படி இப்படிதான் இருக்கத்தான் செய்யும்" என ஸ்டான்ட்அப் காமெடியன் ராஜ்மோகன் சொல்றார். பண்டிகை காலங்களில்தான் காவல் துறை அதிக விழிப்போடு இருக்க வேண்டும். ஆனால் இந்த பண்டிகை காலங்களில்தான் வரலாறு காணாத அளவுக்கு கொலைகள் அதிகரித்துள்ளன. கிரிக்கெட் ஸ்கோர் போல் கொலைகளின் எண்ணிக்கை நேற்று மட்டும் 17 வரை உயர்ந்தது.
அதிகாரிகளால் தொடர்பு கொள்ள முடியாத விஜய்
தீபாவளி அன்று முதல்வரை எந்த அதிகாரியாலும் தொடர்பு கொள்ள முடியவில்லையாம். அந்தளவுக்கு முதல்வர் டீப் ஸ்லீப் மோடிற்கு போய்விட்டார். சி.எம்.சார் 3 நாளாக பேப்பர் படிக்கிறீங்களா? 3 நாட்களாக எங்கே இருந்தீங்க? உங்களை தலைமைச் செயலாளரும், டிஜிபியும் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
24 மணி நேரம் சேவை
காலை 10 மணிக்கு வந்து மாலை 5 மணிக்கு வீட்டிற்கு செல்லும் குழந்தைகள் ஸ்கூல் போகும் வேலை இல்லை இந்த முதல்வர் வேலை! 24 மணி நேரமும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டிய வேலை! ஒரு விரல் புரட்சி செய்து உங்கள் படத்தில் சீன் போட்டீர்கள்! ஒரு விரல் புரட்சி படத்தில்! உருட்டுக்கட்டை புரட்சி உங்கள் ஆட்சியில்!
துணை சபாநாயகர் விவகாரம்
கத்தி படத்தில் தண்ணீர் பிரச்சினைக்கு வாய் கிழிய பேசினீர்கள். அதே தண்ணீர் கேட்டு துணை சபாநாயகர் வீட்டிற்கு ஒருத்தர் வந்தாரு. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு வாக்களித்த ஒருவர், அதுவும் உங்களுக்கு வாக்களித்த நபர் சென்றால் அவரை உருட்டுக் கட்டையால் அடிப்பதா?
அடிப்படை பிரச்சினை குறித்து பேசுவதற்காக ஒரு சாமானியன் வந்தால் அதை அணுகும் பக்குவம் கூட ஆளும் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்றால், தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா, இல்லை காட்டாட்சி நடக்கிறதா?
துப்பாக்கி கலாச்சாரம்
தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் தமிழகத்தின் டிஜிபி, ஏடிஜிபி சட்டம் ஒழுங்கு, உளவுத் துறை ஐஜி உள்ளிட்டோரே பொறுப்பே. சென்னையை பொருத்தமட்டில் கூடுதலாக சென்னை காவல் துறை ஆணையரும் பொறுப்பு இருக்கிறது.
வன்முறைகள்
தமிழகத்தில் வன்முறைகளை தடுக்க வேண்டும், ஓடஓட வெட்டி கொலை செய்வதை தடுக்க வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை முன்கூட்டியே கணிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த புகார்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அவ்வப்போது அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதை முதல்வர் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு பரந்தாமன் விமர்சித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
