2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழிக்கு ஏஐ உலகில் இப்படி ஒரு சோதனையா? நிபுணர்கள் கவலை!
சென்னை: 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான மொழியாக தமிழ் இருந்தாலும் ஏஐ தொழில்நுட்பம் தமிழை இன்னும் குறைந்த தரவுகளைக் கொண்ட மொழியாகவே கருதுகிறது, ஏஐ உலகில் தமிழுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்ற கவலை எழுந்து இருக்கிறது. இதற்கு முக்கிய பிரச்சினையாக தமிழின் தொன்மையும், இலக்கிய வளமும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவுச் செல்வமும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுமையாக இடம்பெறவில்லை என்பதே. எனவே கல்வெட்டுகள் முதல் பழந்தமிழ் இலக்கியங்கள் வரை ஏஐ-யில் இடம்பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கணினியில் தமிழை நிலைநிறுத்துவதற்காக 25 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் போலவே, ஏஐ தொழில்நுட்பத்திலும் தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத்தர தமிழ் அறிஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஏஐ உலகில் தமிழ் மொழி
செம்மொழியான தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும் கூட. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான தமிழ் மொழி, இலக்கியம், இலக்கணம், கலை, பண்பாடு எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. 2,000 ஆண்டுகளுக்கும் மேலான இலக்கிய வரலாற்றைக் கொண்ட தமிழுக்கு, தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) உலகில் போதிய இடம் கிடைக்கவில்லை என்ற கவலை எழுந்து இருக்கிறது.
2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழியாக இருந்தாலும் கூட பெரும்பாலான வணிக ரீதியிலான ஏஐ தொழில்நுட்பங்கள் தமிழை இன்னும் குறைந்த தரவுகளைக் கொண்ட மொழியாகவே கருதுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் ஏஐ தொழில்நுட்பத்தில் தமிழின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து இருக்கிறது.
கணினி பயன்பாட்டில் தமிழ் மொழி
அதாவது தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப எல்லா இடத்திலேயும் தமிழ் மொழியை கொண்டு வருவதற்கு தமிழ் அறிஞர்கள், நிபுணர்கள் பெரும்பாடுபட்டனர். கணினி பயன்பாடு உலகம் முழுக்க அதிகரிக்கத் தொடங்கியதும், அதில் தமிழ் மொழியைப் பயன்படுத்துவதற்குப் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. எனினும் அதற்கு ஏற்ப கணினியில் தமிழ் மொழி வருவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காகப் பல்வேறு நாடுகளில் மாநாடுகள், கருத்தரங்குகள் எல்லாம் நடத்தப்பட்டன. ஆனாலும், கணினியில் பயன்படுத்த வேண்டிய தமிழ் எழுத்துரு எது? என்பதில் நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. எனினும் கல்வியாளர்களின் தொடர் முயற்சியால் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் காரணமாகக் கணினியில் தமிழ் பயன்பாடு படிப்படியாக வளரத் தொடங்கியது.
இப்போது ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதிலும் தமிழ் மொழியை கொண்டு வர தமிழ் அறிஞர்கள், நிபுணர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதாவது ஏஐயில் தமிழ் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமாக ஏஐ பதில் சொல்ல வேண்டும் என்றால் அதில் தமிழின் தரவுகள் அதிகம் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது தான் தமிழ் தொடர்பான கேள்விகளுக்கு ஏஐயால் விளக்கமாக பதில் சொல்ல முடியும்.
என்ன செய்ய வேண்டும்?
தற்போது ஏஐ தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் ஏஐ கருவிகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், தமிழைப் பொறுத்தவரை போதிய தரவுகள் இல்லாததால் அதன் பயன்பாடு குறைவாக இருப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், தமிழின் தொன்மையும், இலக்கிய வளமும், பல நூற்றாண்டுகளாகத் திரட்டப்பட்ட அறிவுச் செல்வமும் ஏஐ தொழில்நுட்பத்தில் முழுமையாக இடம்பெறவில்லை என்பதே முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
கல்வெட்டுகள் முதல் பழந்தமிழ் இலக்கியங்கள் வரை ஏஐ-யில் இடம்பெற வேண்டும். கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற நான்கு நாள் செம்மொழித் தமிழ் மற்றும் தமிழர்கள் தொடர்பான மாநாட்டில் இதுகுறித்து பல்வேறு அறிஞர்களும் நிபுணர்களும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், 80 ஆண்டுகள் பழமையான தமிழ்வளர்ச்சிக் கழகத்தின் தற்போதைய தலைவருமான ம. ராஜேந்திரன், தமிழின் அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் ஏஐ தளங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு
குறிப்பாக, பழங்கால இலக்கியங்கள் மட்டுமின்றி, கல்வெட்டுகள் உள்ளிட்ட வரலாற்று ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ள தமிழ் அறிவுச் செல்வங்கள் அனைத்தும் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு ஏஐ தொழில்நுட்பத்திற்குக் கிடைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழில் உள்ள இலக்கியங்கள், மருத்துவம், அறிவியல், வரலாறு, பண்பாடு, இலக்கணம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் ஏஐ தொழில்நுட்பத்தில் இடம்பெற்றால்தான், தமிழ் தொடர்பான கேள்விகளுக்கு ஏஐ இன்னும் துல்லியமாகவும் விரிவாகவும் பதிலளிக்க முடியும். அதேபோல், அடுத்த தலைமுறையினர் தமிழ் மொழியில் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும், தமிழிலேயே தகவல்களைப் பெறவும் இது உதவும்.




Click it and Unblock the Notifications
