எங்க பணத்தை நாங்க கிழிக்கிறோம்.. திருச்செந்தூர் கோவிலில் கட்டுக்கட்டாக நோட்டுகளை கிழித்த 2 பேர்! ஏன்
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவில் வளாகத்தில், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை கீழே கொட்டி கிழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... அங்கிருந்தவர்கள் பணத்தை கிழிக்க வேண்டாம் என்று தடுத்தும், அவர்கள் தொடர்ந்து பணத்தை கிழித்துள்ளனர். இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

திருச்செந்தூர் கோவில்
இந்நிலையில், கோவில் வளாகத்தில் ஆண் ஒருவரும், நடுத்தர வயது பெண் ஒருவரும் தங்களிடம் இருந்த பையிலிருந்த பணத்தை எடுத்து தரையில் கொட்டியுள்ளனர். பிறகு அந்த ரூபாய் நோட்டுகளை 2 பேரும் மாறி மாறி கிழித்து கீழே வீசியுள்ளனர்.
இது தொடர்பாக பரவி வரும் வீடியோவில், "அங்கிருந்தவர்கள் ஏன் பணத்தை கிழிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.. அதற்கு அவர்கள், "எங்கள் பணம், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம்" என்று கூறியபடி இருவரும் பணத்தை கிழிக்கிறார்கள்.
பணத்தைக் கிழித்த பெண்
பணத்தை கிழித்து கொண்டே அந்த பெண் சொல்லும்போது, "உழைத்து சம்பாதித்த பணத்தை யாரும் இப்படி கிழிக்க மாட்டார்கள்.. நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை யாரும் பறிக்க மாட்டார்கள். களவாடிய பணத்தைதான் பறிப்பார்கள்.. நீங்கள் போங்கள். ஊரை ஏமாற்றி, அந்தப் பணத்தைச் சேர்த்து வைத்திருந்தால், அதை எடுத்துக்கொள்ளத்தான் செய்வார்கள். அன்று நாங்கள் எவ்வளவு பணம் கொடுத்துவிட்டு சென்றோம் தெரியுமா? அடுத்தவர் பணத்தில் உழைப்பவர்களுக்குத்தான் அந்தப் பணத்தின் அருமை தெரியும்" என்கிறார்..
உடனே அங்கிருந்தவர்கள் பணத்தை கிழிக்காதீங்க, கிழிக்காதீங்க என்று பதறியபடி தடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண் யாருடைய பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து ரூபாய் நோட்டுகளை கிழித்துக் கொண்டேயிருக்கிறார்.. இவ்வளவும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கொதித்த இணையவாசிகள்
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். "இவங்க இரண்டு பேரையும் வெளுத்து விடுங்க டா. இது ரோடு, சரியா? அரசாங்க சொத்து. அவங்க உழைத்து சம்பாதிக்கல. வழிப்போக்கிகள் இவர்களுக்கு காணிக்கை போட்ட காசு. 2 பேரையும் வைச்சு வெளுத்து விடுங்க. எழுந்து ஓடட்டும்" என்றெல்லாம் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோவில் வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதைப் பார்த்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் 2 பேரும் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்ததாகவும், அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் அவர்களைப் பிடித்து விசாரித்தபோதுதான், அவர்களது பையில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்தப் பணம் யாருடையது என்று கேட்டபோது, எங்கள் பணம், நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று சொல்லி, பணத்தை கிழித்து போட துவங்கி விட்டார்களாம்..!!



Click it and Unblock the Notifications
