தாயுமானவர் திட்டம் விரிவாக்கம்.. டிசம்பர் முதல் யாருக்கெல்லாம் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்?
சென்னை: தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடைகளுக்கு அலைய வேண்டிய நிலைமை இனிமேல் குறையப்போகிறது... ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள தாயுமானவர் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதனால் யாருக்கெல்லாம் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரப்போகிறது தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்..!!
தமிழகத்தில் 2 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரத்து 841 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்தக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

ரேஷன் விநியோகம்
பொதுவாக ரேஷன் பொருட்களை வாங்க குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் கடைக்கு நேரில் செல்ல வேண்டும். அங்கு விற்பனை முனையக் கருவியில் விரல் ரேகையைப் பதிவு செய்த பிறகுதான் பொருட்கள் வழங்கப்படும். ஆனால் வயதானவர்கள், உடல்நலம் சரியில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் கடைக்கு வந்து பொருட்களை வாங்குவது சிரமமாக இருந்து வந்தது.
தாயுமானவர் திட்டம்
இந்த சிரமத்தை போக்குவதற்காகத்தான் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன.
இதுக்காகவே ரேஷன் கடை ஊழியர்கள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் சென்று பயனாளிகளின் வீடுகளில் வழங்கி வருகிறார்கள்.. ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் இந்த விநியோகம் தவறாமல் நடந்து கொண்டிருக்கிறது..
65 வயதுக்கு மேல்
இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் முதல் இந்தத் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற வரம்பு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என மாற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 19.30 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் வீடுகளிலேயே ரேஷன் பொருட்களைப் பெற்று வருகிறார்கள்.
யாருக்கெல்லாம் கிடைக்கும்?
இந்நிலையில், தாயுமானவர் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருநங்கையர், விதவைகள், முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் நேரடியாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன
இந்த புதிய விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பெற உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள 4.89 லட்சம் பேர் இதனால் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் அமல்
இந்தப் புதிய விரிவாக்கம் வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக ஆண்டுக்கு ரூ.11 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ரேஷன் கடைக்கு நேரில் சென்று பொருட்களை வாங்க முடியாமல் சிரமப்படும் மேலும் பல குடும்பங்களுக்கு இனி வீட்டிலேயே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். குறிப்பாக வயதானவர்கள், தனியாக வசிப்பவர்கள் மற்றும் கடைக்கு வந்து செல்ல முடியாதவர்களுக்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும்.




Click it and Unblock the Notifications
